ADDED : ஜூன் 17, 2024 02:10 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில் கன்னடபாளையம் உள்ளது. கடந்த 2012ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
ஆனால், போதிய பராமரிப்பின்றி மாட்டு தொழுவம் போல் மாறியது. இதனால், மழை காலங்களில் கூட பயணியர் ஒதுங்கி நிற்க முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்தாண்டு வீசிய 'மிக்ஜாம்' புயலுக்கு வலுவிழந்தது. தற்போது ஆவடியின் 'சாய்ந்த நிழற்குடை'யாக மாறி உள்ளது.
அதேபோல, கடந்தாண்டு ஆவடி எச்.வி.எப்., சாலை 'ஆர்ச்' முதல் கோவில்பதாகை வரை 3,200 மீ., துாரத்திற்கு, 11.70 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன.
ஆபத்தான வகையில் சாய்ந்திருக்கும் பேருந்து நிழற்குடையை அகற்றாமல், அதையொட்டியே மழைநீர் வடிகால் பணியை மேற்கொண்டனர்.
அவர்களின் இந்த அலட்சிய போக்கால், எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை சரிந்து விழும் நிலையில் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சிதலமடைந்த நிழற்குடைக்கு பதிலாக புது நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.