/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண் கட்டாயமாக்கி ரயில்வே உத்தரவு
ADDED : ஜூலை 09, 2024 12:14 AM
சென்னை,சென்னையில் கடற்கரை -- செங்கல்பட்டு, சென்ட்ரல் -- திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில், தினமும் 550 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் இருந்து, ரயில்களில் தினமும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக, சென்னை ரயில்வே கோட்டத்தில், 160 கி.மீ., வரை, சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த வகையில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர், சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீசன் டிக்கெட்டுகளை பெறவோ அல்லது கவுன்டர்களில் புதுப்பிக்கவோ வரும் முன்பதிவில்லாத பயணியரிடம், மொபைல்போன் எண்ணை சேகரிக்க, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பெறும் பயணியரிடம், மொபைல்போன் எண்கள் பெறப்பட்டன. தற்போது, முன்பதிவு செய்யப்படாத பயணியரிடமிருந்தும் மொபைல்போன் எண்ணை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு, பயணியர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பயணியர் சிலர் கூறுகையில், 'மொபைல்போன் எண் பெறுவது கட்டாயம் எனக் கூறி, கவுன்டர்களில் இதுபோன்ற அடிப்படை விபரங்களை சேகரிப்பது, பயணியரின் தனியுரிமையை மீறுவதாகும்' என்றனர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'மானிய விலையில் சீசன் டிக்கெட்டுகளைப் பெறும் பயணியரிடமிருந்து, அடிப்படை தகவல்களை சேகரிப்பதே இதன் நோக்கம்' என்றனர்.
ஜி.டி., ரயில் மாற்றம்
சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனும் ஜி.டி.., விரைவு ரயில், மே 9 முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு இவ்வாறு இயக்கப்படும் என, ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி நடந்து வருவதால், தற்காலிகமாக வரும் 23ம் தேதி முதல் ஜி.டி., விரைவு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கான, அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட உள்ளது.
பித்ரகுண்டா ரயில் ரத்து
ஆந்திரா மாநிலம், விஜயவாடா கோட்டத்தில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், ஆந்திரா மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் அதிகாலை 4:55 மணி ரயிலும், அதேபோல் சென்ட்ரலில் இருந்து பித்ரகுண்டா செல்லும் ரயிலும், வரும் 29, 30, 31, ஆக., 1, 2, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 29, 30ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.