/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டு எண்ணும் மையங்களில் தள்ளுமுள்ளு, மின் தடை ஓட்டு எண்ணும் மையங்களில் தள்ளுமுள்ளு, மின் தடை
ஓட்டு எண்ணும் மையங்களில் தள்ளுமுள்ளு, மின் தடை
ஓட்டு எண்ணும் மையங்களில் தள்ளுமுள்ளு, மின் தடை
ஓட்டு எண்ணும் மையங்களில் தள்ளுமுள்ளு, மின் தடை
ADDED : ஜூன் 05, 2024 12:31 AM

சென்னையில் மூன்று லோக்சபா தொகுதிகளில், நேற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கியபோது, அம்மையங்களில் தள்ளுமுள்ளு, தாமதம் மற்றும் மின்தடை ஏற்பட்டது. வட சென்னை தொகுதியில் பதிவான ஓட்டுகள் ராணிமேரி கல்லுாரியிலும், தென் சென்னையில் பதிவான ஓட்டுகள் அண்ணா பல்கலையிலும், மத்திய சென்னையில் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லுாரியிலும் நேற்று எண்ணப்பட்டன.
ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வந்த அரசியல் கட்சி முகவர்கள், பணியாளர்களின் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்கள் வாங்கப்பட்டு, சட்டசபை வாரியாக 'டோக்கன்' வழங்கப்பட்டன. அனைவரும் பலத்த சோதனைக்குப் பின், மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை மையங்களில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
மத்திய சென்னை
முகவர்கள் தள்ளுமுள்ளு: ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன், காலை 7:30 மணியளவில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் அனைத்தும், கட்சி முகவர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வைக்கப்பட்டிருந்த 'சீல்' அகற்றினர். அப்போது, கட்சி முகவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சுற்று அறிவிப்பில் தாமதம்: வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 12வது மேஜை ஓட்டு எண்ணும் இயந்திரம் பழுதானதால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டது. ஆயிரம்விளக்கு தொகுதி 2வது சுற்று பணி ஆரம்பிக்கும் போது 4வது மேஜையில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும் பழுதானது. அதையும் சீர்செய்யும் பணி நடந்ததால், அதேபோல் காலதாமதம் ஏற்பட்டது.
பணி மந்தம்: 3வது சுற்று, துறைமுகம் தொகுதி 8வது மேஜையில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. இதை சீர்செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, இதுபோன்ற மின்னணு பழுது காரணமாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், ஓட்டு எண்ணும் பணி மந்தமாக நடந்தது.
இயந்திரம் பழுது: ஆயிரம் விளக்கு தொகுதி ஓட்டுகள் எண்ணும் அறையில் உள்ள, 4வது மேஜையில் உள்ள இயந்திரமும், துறைமுக தொகுதியில் மேஜை 8ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் இயங்கவில்லை. வில்லிவாக்கம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் அறையில், 12வது மேஜையில், ஓட்டுப்பதிவு இயந்திரம் மாற்றி கொண்டு வரப்பட்டு, எண்ணியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட சென்னை
மின் தடை: வடசென்னை தொகுதியில் ஓட்டுப்பதிவு துவங்கும்போது, பத்திரிகையாளர் அறை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அரை மணி நேரம் வரை மின்தடை நீடித்தது.
பேட்டரியால் தாமதம்: திருவொற்றியூர் சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது, சில இயந்திரங்களில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால், ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. பின், மாற்று பேட்டரிகள் பொருத்தி, ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
அனுமதி மறுப்பு: ஓட்டு எண்ணிக்கை துவக்கத்தின்போது, கொளத்துார் தவிர்த்து மற்ற தொகுதிகளில் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடும் வாக்குவாதத்திற்குப் பின் அனுமதிக்கபட்டனர்.
தென் சென்னை
செல்லாத ஓட்டுகள்: தென்சென்னை தொகுதியில், காலை 8:00 மணிக்கு துவங்க வேண்டிய ஓட்டு எண்ணிக்கை, 9:22 மணிக்கு தான் துவங்கியது; முதலில், 3,973 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. செல்லாத ஓட்டுகள் அதிகம் அறிவிக்கப்பட்டதால், அதிகாரிகளிடம் கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திறக்க முடியவில்லை: நான்காவது சுற்றில், நான்காவது மேசையில் உள்ள மின்னணு ஓட்டு இயந்திரம் திறக்க முடியாத காரணத்தால் 17 சுற்றுகள் முடிந்த பின் எண்ணப்பட்டு, இறுதியில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏழு இயந்திரங்கள் பழுது: தென்சென்னை தொகுதியில், ஏழு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி, ஓட்டு எண்ணுவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, தேர்தல் நடத்தும் அலுவலர் அமித்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, 'வி.வி.பேட்' வாயிலாக பதிவான ஓட்டுகள் கணக்கிடப்படும் என, விளக்கம் அளித்தார்.
அதை ஏற்காத, தமிழிசை, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ஏழு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றால், 7,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளின் நிலை குறித்து, தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளீர்கள் என, தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
- நமது நிருபர் குழு -