Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்

சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்

சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்

சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்

ADDED : ஜூலை 07, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
வில்லிவாக்கம், சென்னை, புறநகரில், நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இதில், போரூர், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையான ஆற்காடு சாலையில் தண்ணீர் தேங்கியது.

நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் இந்த சாலையில், போதிய மழைநீர் வடிகால் வசதியில்லை. தவிர, மெட்ரோ பணி நடப்பதால் சாலை மோசமாகி தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது.

பிரதான சாலை இங்கு தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து, மின் மோட்டார் வாயிலாக, சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே சர்வீஸ் சாலையிலும், மழைநீர் தேங்கியது. இந்த சாலையின் ஒரு பகுதியில் வில்லிவாக்கம் சந்தை உள்ளது.

கடந்த வாரம் பெய்த மழைக்கு நாசமான இந்த சாலையின் பள்ளத்தில், இரு நாட்களுக்கு முன் 95வது வார்டு கவுன்சிலர் மற்றும் வில்லிவாக்கம் சந்தை வியாபாரிகள் சேர்ந்து, மணலை கொட்டி சாலையை சமன்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், சர்வீஸ் சாலையில் மீண்டும் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், அவ்வழியாக செல்வோர், பள்ளம் தெரியாமல் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்காணித்து, புதிய சாலை அமைக்க வேண்டும். அல்லது பள்ளங்களை முழுதாக சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் வெட்டை கண்டித்து மறியல்

குன்றத்துார் அருகே, பூந்தண்டலம் ஊராட்சியில், நல்லுார், புதுநல்லுார் கிராமத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் இரவு 11:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. அதிகாலை 3:00 மணிக்கு மேல் மின்சாரம் மீண்டும் வந்தது. இதனால், இரவு முழுதும் கொசுக்கடி மற்றும் புழுக்கத்தால், பகுதிவாசிகள் துாக்கமின்றி அவதிக்குள்ளாகினர்.இதனால் ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் 30க்கும் மேற்பட்டோர், புதுநல்லுாரில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினர். இதனால், சோமங்கலம் - புதுநல்லுார் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us