/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'நகல் கூட இல்லை' கோவில் சொத்து விபரம் கேட்டோருக்கு பதில் 'நகல் கூட இல்லை' கோவில் சொத்து விபரம் கேட்டோருக்கு பதில்
'நகல் கூட இல்லை' கோவில் சொத்து விபரம் கேட்டோருக்கு பதில்
'நகல் கூட இல்லை' கோவில் சொத்து விபரம் கேட்டோருக்கு பதில்
'நகல் கூட இல்லை' கோவில் சொத்து விபரம் கேட்டோருக்கு பதில்
ADDED : ஜூன் 01, 2024 12:22 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், கோவில் பற்றிய பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பக்தர்கள் கேட்டு பெறுகின்றனர்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கு 30 நாட்களை கடந்தும் பதில் அளிக்காமல் கோவில் நிர்வாகங்கள் உள்ளன.
பக்தர்கள் மேல்முறையீடு செய்தும், தகவல் கமிஷனில் வழக்கு தொடுத்தும், தங்கள் கேள்விகளுக்கு பதில் பெற வேண்டிய நிலையை, கோவில் நிர்வாக அதிகாரிகள் ஏற்படுத்துவதாக, பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் தாமல்வார் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பராமரிக்கப்படும் சொத்து பதிவேடு ஆவணங்களின் ஜெராக்ஸ் நகலை, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுள்ளார்.
அதற்கு, கோவில் நிர்வாகம் தரப்பில், 'சொத்து பதிவேடு, இக்கோவில் அலுவலகத்தில் கிடைக்கவில்லை' என, பதில் அளித்துள்ளனர்.
அதேபோல், டில்லிபாபு என்பவர், உலகளந்த பெருமாள் கோவில் பற்றி பல்வேறு கேள்வி எழுப்பி இருந்தார். கோவிலின் சொத்து பதிவேடு நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார்.
இதற்கு, 'சொத்து பதிவேடு ஆவணங்களின் நகல் இல்லை' என, கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து டில்லிபாபு கூறியதாவது:
தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, கோவிலில் நடந்த பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளோம். கோவில் சொத்து பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினால் கூட, சரியான பதில் அளிக்காமல், நகல் கூட இல்லை என பதில் அளிப்பது அதிர்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.