/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆயிரம் விளக்கு நுழைவாயில் மாற்றம் ஆய்வு செய்ய மெட்ரோ நிறுவனம் ஒப்புதல் ஆயிரம் விளக்கு நுழைவாயில் மாற்றம் ஆய்வு செய்ய மெட்ரோ நிறுவனம் ஒப்புதல்
ஆயிரம் விளக்கு நுழைவாயில் மாற்றம் ஆய்வு செய்ய மெட்ரோ நிறுவனம் ஒப்புதல்
ஆயிரம் விளக்கு நுழைவாயில் மாற்றம் ஆய்வு செய்ய மெட்ரோ நிறுவனம் ஒப்புதல்
ஆயிரம் விளக்கு நுழைவாயில் மாற்றம் ஆய்வு செய்ய மெட்ரோ நிறுவனம் ஒப்புதல்
ADDED : ஜூலை 19, 2024 12:21 AM
சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, இந்த கோவிலின் ராஜ கோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்காக, ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த முதல் பெஞ்ச், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை அருகில் உள்ள இடங்களில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து தெரிவிக்க உத்தரவிட்டது.
அதன்படி, ஜூலை 6ல் மெட்ரோ ரயில் நிர்வாக தொழில்நுட்ப குழு, நேரில் ஆய்வு செய்தது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் ஜெயேஷ் டோலியா ஆஜரானார்.
''நீதிமன்ற உத்தரவின்படி, தொழில்நுட்பக்குழு ஆய்வு செய்தது. மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியாக வேறு இடத்துக்கு மாற்றுவது சாத்தியமில்லை,'' என்றார்.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி வாதிட்டதாவது:
கோவிலின் ராஜகோபுரத்துக்கு நேராக மெட்ரோ ரயில் நுழைவு வாயில் அமைவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது, ரத்தின விநாயகர் கோவிலை அகற்றி, அந்த இடத்தில் மெட்ரோ நுழைவு வாயில் அமைக்கும் மாற்று திட்டத்தை நிர்வாகம் கூறுகிறது. இதை ஏற்க முடியாது. நுழைவு வாயிலை, அருகிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வாயிலில் இருக்கும் காலியிடத்தில் வைக்கும் பரிந்துரையை ஏற்கலாம்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், 'சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழுவை அமைத்து, மாற்று இடத்தில் நுழைவு வாயிலை வைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்படும்' என்றனர். அதற்கு, 'இதனால் பணிகள் மேலும் காலதாமதம் ஆகும். எனவே, தற்போது பணியை செய்து வரும் எல் அண்ட் டி வாயிலாக, வேறு இடத்தில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என அறிந்து, அறிக்கை சமர்ப்பிக்கப்படும்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், வரும் 22ல் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.