/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'புதையல்' நகை மோசடி கர்நாடக பெண் கைது 'புதையல்' நகை மோசடி கர்நாடக பெண் கைது
'புதையல்' நகை மோசடி கர்நாடக பெண் கைது
'புதையல்' நகை மோசடி கர்நாடக பெண் கைது
'புதையல்' நகை மோசடி கர்நாடக பெண் கைது
ADDED : ஜூலை 28, 2024 12:39 AM
தாம்பரம்,மேற்கு தாம்பரம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ருக்மணி, 37; மாற்றுத்திறனாளி. இவர், மேற்கு மாம்பலம், கோவிந்தராஜ் தெருவில் உள்ள 'ஜெராக்ஸ்' கடையில் பணிபுரிகிறார். இந்த கடைக்கு, 10 நாட்களாக, ஜெராக்ஸ் எடுக்க, அடிக்கடி இருவர் வந்து சென்றுள்ளனர்.
அப்போது, 'நாங்கள் கட்டட வேலையின்போது, மண்ணை தோண்டும் போது தங்க நகை கிடைத்தது. பல லட்சம் மதிப்பிலான அந்த நகைகளை, உங்களுக்கு 6.50 லட்சம் ரூபாயில் தருகிறோம்' என, ஆசைவார்த்தை கூறி ருக்மணியை நம்ப வைத்துள்ளனர்.
ருக்மணியும் கடன்கள் வாங்கி 6.50 லட்சம் புரட்டி உள்ளார். தொடர்ந்து, அவர்கள் கூறியதுபோல கடந்த 24ம் தேதி, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார். அங்கு பணத்தை கொடுத்து நகைகளை பெற்றுக் கொண்டார்.
அதன்பின், அந்த நகையை தனக்கு தெரிந்த நகை கடைக்கு எடுத்து சென்று சோதித்து பார்த்தார். அப்போது அவை போலி என்பது தெரியவந்தது.
இதில், அதிர்ச்சியடைந்த ருக்மணி, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் ருக்மணியிடம் பேசிய பெண்ணின் மொபைல் போன் எண்ணை வைத்து விசாரித்தனர். இதில், கர்நாடகாவைச் சேர்ந்த கீதா, 52, என்பதும், செங்கல்பட்டு அருகேயுள்ள ஆப்பூர், பாரதியார் நகரில் அவர் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த ரோகித், 24, கித்தா என்கிற ஆகாஷ், 25, ஆகியோர் தலைமறைவாகினர்.
போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:
கர்நாடகாவைச் சேர்ந்த தேவிலால் - கீதா தம்பதிக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். தேவிலால், இரண்டு ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். அவர் உயிருடன் இருந்த போது, கர்நாடகா, கே.ஆர்.எஸ்., அணையில் மீன் பிடிப்பது வழக்கம்.
அப்போது, அவருக்கு பழக்கமான ரோகித் மற்றும் கித்தா என்கிற ஆகாஷ் ஆகிய இருவர், தேவிலால் இறந்ததும், 'எங்களுடன் வாருங்கள்; பிழைக்க ஏதாவது ஏற்பாடு செய்கிறோம்' எனக் கூறியுள்ளனர்.
இதை நம்பி, கீதா, தன் மூத்த மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் வந்து, ஆப்பூரில் தங்கியுள்ளார். ஜூலை 24ம் தேதி, ரோகித் மற்றும் கித்தா ஆகிய இருவர், கீதாவை தாம்பரத்திற்கு அழைத்து சென்று, போலி நகையை கொடுத்து, ருக்மணியிடம் இருந்து, 6.50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு மாயமானது தெரியவந்தது.
தொடர்ந்து, கீதாவிடம் இருந்து, 5.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். அவர்கள் இருவரையும் கைது செய்த பின்னர், இன்னும் பல தகவல்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.