/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் 'அழுத்தம்' ஒக்கியம்மடு விரிவாக்க பணிகள் கொர்ர்ர்... அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் 'அழுத்தம்' ஒக்கியம்மடு விரிவாக்க பணிகள் கொர்ர்ர்...
அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் 'அழுத்தம்' ஒக்கியம்மடு விரிவாக்க பணிகள் கொர்ர்ர்...
அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் 'அழுத்தம்' ஒக்கியம்மடு விரிவாக்க பணிகள் கொர்ர்ர்...
அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் 'அழுத்தம்' ஒக்கியம்மடு விரிவாக்க பணிகள் கொர்ர்ர்...
ADDED : ஜூன் 10, 2024 02:01 AM
சென்னை:தென்சென்னை புறநகர் பகுதியில் உள்ள, 62 ஏரிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், 400 அடி அகல ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் கலக்க வேண்டும்.
ஒக்கியம் மடு, துரைப்பாக்கம் அருகே, ஓ.எம்.ஆர்., குறுக்கே செல்கிறது. தற்போது, ஒக்கியம் மடு, 250 அடி அகலத்தில் உள்ளது. 'மிக்ஜாம்' புயல் மழையில், ஒக்கியம் மடுவில் ஆகாய தாமரை சேர்ந்து, நீரோட்டம் தடைபட்டு வேளச்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அப்போது, அமைச்சர்கள் நேரு, கணேசன் மற்றும் தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் மழைக்கால சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒக்கியம்மடு பகுதியை ஆய்வு செய்தனர்.
இவர்கள் அனைவரும், ஒக்கியம்மடு பகுதியை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என முடிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதோடு, துரைப்பாக்கம் பகுதி மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, டிச., 16ம் தேதி, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில், ஒக்கியம் மடுவை ஆய்வு செய்தார்.
இதில், 450 மீட்டர் துார கரை பகுதியை சாலை அமைத்து, ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்தது, வெள்ள பாதிப்புக்கு ஒரு காரணம் என தெரிந்தது.
இதில், 250 மீட்டரில் மண் சாலையும், 200 மீட்டரில் சிமென்ட் சாலையும் உள்ளது. இந்த சாலையை அகற்றி, ஒக்கியம்மடுவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணி, டிச., 28ம் தேதி துவங்க இருந்தது.
ஒக்கியம்மடுவை ஆக்கிரமித்து சாலையாக பயன்படுத்திய நிறுவனம், பட்டா இடம் வழியாக, மாற்று சாலை அமைக்க, 15 நாட்கள் கால அவகாசம் கேட்டது.
அதுவும், நீர்வளத்துறை வழங்கியது. மாற்று பாதை அமைத்து, ஆறு மாதம் ஆகியும், ஒக்கியம்மடுவை விரிவாக்கம் செய்ய, நீர்வளத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஒக்கியம்மடு ஆக்கிரமிப்பு பாதையை அப்படியே விட, ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் நீர்வளத்துறைக்கு 'அழுத்தம்' கொடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், ஒக்கியம்மடுவை விரிவாக்கம் செய்ய முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.
இதுகுறித்து, துரைப்பாக்கம் பகுதி நலச்சங்கங்கள் கூறியதாவது:
அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு செய்ததால், ஒக்கியம்மடு உடனே விரிவாக்கம் செய்யப்படும். இனிமேல் வெள்ள பாதிப்பு இருக்காது என நம்பினோம்.
நீர்வளத்துறை அதிகாரிகள் மவுனம் காப்பதை பார்க்கும் போது, அடுத்த வெள்ள பாதிப்பு வரை விரிவாக்கம் செய்யமாட்டார்கள் என நினைக்கிறோம். ஒரு நிறுவனத்திற்காக, தென்சென்னையின் மொத்த மக்களையும் வெள்ளத்தில் மூழ்கடிப்பது எந்த விதத்தில் நியாயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.