/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோடம்பாக்கத்தில் மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் கீழ்நிலை தொட்டி கோடம்பாக்கத்தில் மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் கீழ்நிலை தொட்டி
கோடம்பாக்கத்தில் மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் கீழ்நிலை தொட்டி
கோடம்பாக்கத்தில் மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் கீழ்நிலை தொட்டி
கோடம்பாக்கத்தில் மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் கீழ்நிலை தொட்டி
ADDED : ஜூலை 19, 2024 05:31 PM

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், அஜீஸ் நகர், பராங்குசுபுரம் பகுதியில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற, 1.30 கோடி ரூபாய் மதிப்பில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னையில், கடந்த 2021ல் பெய்த கனமழையில், கோடம்பாக்கம் மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இம்மண்டலத்தில், 188 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக, கடந்த 2022 மழைக்காலத்தில், பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.
இருந்தும், கோடம்பாக்கம் 132வது வார்டில் உள்ள பராங்குசுபுரம், அஜீஸ் நகர் ஆகிய பகுதிகளில், கடந்தாண்டு பெய்த மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இப்பகுதிகளின் மழைநீர், 44 எண் கொண்ட சிறுபாலம் வழியாக, கோடம்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, தி.நகர் 133வது வார்டு வழியாக, மாம்பலம் கால்வாய்க்குச் செல்ல வேண்டும்.
ஆனால், மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, இப்பகுதியில் தேங்கும் மழைநீரை, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் கால்வாயில் விட, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அத்திட்டமும் தோல்வியை தழுவியது.
தற்போது, அஜீஸ் நகர், பராங்குசுபுரம் பகுதிகளின் மழைநீரை தேக்க, கோடம்பாக்கம் அஜீஸ் நகர் ரயில்வே பாடர் சாலையில், கீழ்நிலை தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
இந்த கீழ்நிலை தொட்டி 10 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலம், 3 மீட்டர் ஆழம் கொண்டது.
இதன் கொள்ளளவு 1 லட்சம் லிட்டர்.
இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, ரயில்வே பாடர் சாலை வழியாக, 340 மீட்டர் துாரத்திற்கு, 25 செ.மீ., விட்டம் கொண்ட மூன்று குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
இந்த குழாய், கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள மழைநீர் வடிகாலில் இணைக்கப்படும். அங்கிருந்து மழைநீர், டிரஸ்ட்புரம் கால்வாயில் வெளியேற்றப்படும்.
தற்போது, அஜீஸ் நகர் ரயில்வே பாடர் சாலையில் கட்டப்படும் கீழ்நிலை தொட்டியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, 30 குதிரை திறன் கொண்ட, நான்கு மின் மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன.
மொத்தமாக, 1.30 கோடி ரூபாய் செலவில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் பராங்குசுபுரம், அஜீஸ் நகர், ரங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.