/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழிவிடாத இளைஞரை காருக்குள் ஏற்றி 'துவைத்தெடுத்த' தி.மு.க., ஊராட்சி தலைவர் வழிவிடாத இளைஞரை காருக்குள் ஏற்றி 'துவைத்தெடுத்த' தி.மு.க., ஊராட்சி தலைவர்
வழிவிடாத இளைஞரை காருக்குள் ஏற்றி 'துவைத்தெடுத்த' தி.மு.க., ஊராட்சி தலைவர்
வழிவிடாத இளைஞரை காருக்குள் ஏற்றி 'துவைத்தெடுத்த' தி.மு.க., ஊராட்சி தலைவர்
வழிவிடாத இளைஞரை காருக்குள் ஏற்றி 'துவைத்தெடுத்த' தி.மு.க., ஊராட்சி தலைவர்
ADDED : ஜூன் 04, 2024 12:14 AM

செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார், 20. மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து மோகன்குமார் மற்றும் அவரது நண்பரான திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் இருவரும், பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை தங்கராஜ் ஓட்டினார். வீராபுரம் கூட்டு சாலை அருகில் வந்த போது, பின்னால் வந்த ஆடி சொகுசுகாரில், குண்ணவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா, 40 உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
சத்யா, காட்டாங்கொளத்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
காரில்ஒலி எழுப்பியும், பைக்கில் சென்றவர்கள் ஒதுங்கி வழிவிடாததால் அவர்களை மடக்கியுள்ளார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும், காரில் இருந்து இறங்கிய சத்யா தாக்கியுள்ளார்.
பின், வீட்டிற்கு சென்ற மோகன்குமார், தன் நண்பர்களுடன் இரவு 7:30 மணி அளவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சத்யாவின் ஆதரவாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கே வந்தனர். மோகன்குமார் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித்குமார், 20, இருவரையும் கடத்திச் சென்றனர்.
மகேந்திரா சிட்டி தனியார் கார் தொழிற்சாலை அருகில், சத்யாவும் சேர்ந்து மோகன் குமாரை தாக்கினர். பின், மோகன்குமாரை தன் காரின் உள்ளே ஏற்றி தாக்கியபடியே, மகேந்திரா சிட்டியின் முக்கிய சாலைகளில் உலா வந்துள்ளார். பின், இருவரையும் காரில் இருந்து இறக்கிவிட்டு, மீண்டும் மிரட்டிவிட்டு சென்றனர்.
இதற்கிடையே, மோகன் குமாரை கும்பல் கடத்தி சென்றது குறித்து, அவரது உறவினர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, மகேந்திரா சிட்டி பகுதியில் காயங்களுடன் இருந்த மோகன்குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, குண்ணவாக்கம் தி.மு.க., ஊராட்சி தலைவர் சத்யா உட்பட 30 பேர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல், கொலை முயற்சி உட்பட ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முதற்கட்டமாக, திருவள்ளூர் மணிகண்டன், 42, அமணம்பாக்கம் தினேஷ், 25, குண்ணவாக்கம் அப்பு, 27, அனுமந்தை சுகுமார், 29, திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்துார் ஸ்ரீதரன், 23, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ், 35, மற்றும் 17 வயது சிறுவன் ஒருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ஊராட்சி தலைவர் சத்யாவை, போலீசார் தேடி வருகின்றனர்.