/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி வழக்கு! கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி வழக்கு! கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி
கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி வழக்கு! கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி
கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி வழக்கு! கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி
கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி வழக்கு! கோர்ட்டுக்கு போகிறது சென்னை மாநகராட்சி
ADDED : ஜூன் 03, 2024 11:14 PM

சென்னை, ''சென்னையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கின்றன. நாய்க்கடியால் ஆண்டிற்கு, 20,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாய்களை கட்டுப்படுத்துவதற்கு, விதிமுறைகளை மாற்ற, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்,'' என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, மெரினா கடற்கரையில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து, தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை, நேற்று நடத்தின. நேற்று 150 தெருநாய்களுக்கும், வளர்ப்பு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
விலங்குகள் நல வாரிய விதிமுறைப்படி, கருத்தடை செய்தால் மட்டுமே, நாய்களை கட்டுப்படுத்த முடியும். நாட்டிலேயே தமிழகத்தில் தான், ஒரே நாளில் நாய்களுக்கு 50 முதல் 66 கருத்தடை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
மற்ற நாடுகளில் இருப்பது போல், இங்கு நாய்களை அப்புறப்படுத்த முடியாது. அதுபோன்ற சட்டம் இந்தியாவில் இல்லை.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பின், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, அனைத்து அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
அனைவரும், தற்போது உள்ள சட்ட விதிமுறைகளை மட்டுமே கூறிக்கொண்டிருந்தால், நாய்க்கடி விவகாரத்திற்கு தீர்வு கிடைக்காது. நாய்கள் வளர்ப்பில் எந்த மாதிரியான சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் என, நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.
சென்னையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. தெருநாய்கள் குறித்த கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்.
செல்லப்பிராணி வளர்ப்போர், சமீப காலமாக முறைப்படி சான்றிதழ்களை பெறுவது கிடையாது. பாதுகாப்பற்ற முறையில் செல்லப்பிராணியை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என எச்சரித்தும், நாய்களின் உரிமையாளர்கள் அதை மீறுகின்றனர்.
சென்னையில் மட்டும், ஆண்டிற்கு, நாய்க்கடியால், 20,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முறையாக தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது சாதகமான சூழல் இருந்தாலும், மற்றவர்களுக்கு பாதகம் விளைவிக்கும் என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
நாய்களுக்கு முகக்கவசம் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட, மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. கயிறு கட்டி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என, அறிவுரை மட்டுமே கூற முடியும்.
ஆனால், நாய்க்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், கட்டாயமாக முகக்கவசம் அணிவிக்க வேண்டும் என, விதிமுறைகள் உள்ளன. நாய் ஆர்வலர்கள், 'நாய் கடிக்காது' எனக் கூறுவது தவறான கருத்து. நாய் வளர்ப்பவர்களை வேண்டுமானால் அவை கடிக்காமல் இருக்கலாம். ஆனால் பொது இடங்களில், தெருநாயாக இருந்தாலும், வளர்ப்பு நாயாக இருந்தாலும், மற்றவர்களை கடித்து விடுகின்றன.
எனவே, நாய் வளர்ப்பவர்கள் கவனத்துடன், தங்களது நாய்களை பராமரித்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.