Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சூளைமேடு கூவம் தரைப்பாலம் பணி ஜவ்வு டெண்டர் விட்டும் துவங்காததால் அதிருப்தி

சூளைமேடு கூவம் தரைப்பாலம் பணி ஜவ்வு டெண்டர் விட்டும் துவங்காததால் அதிருப்தி

சூளைமேடு கூவம் தரைப்பாலம் பணி ஜவ்வு டெண்டர் விட்டும் துவங்காததால் அதிருப்தி

சூளைமேடு கூவம் தரைப்பாலம் பணி ஜவ்வு டெண்டர் விட்டும் துவங்காததால் அதிருப்தி

ADDED : ஜூன் 04, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
அரும்பாக்கம், சென்னை, அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டு, சூளைமேடில், மாதா கோவில் தெரு உள்ளது. இந்த தெருவைச் சுற்றி, எம்.எச்., காலனி, கலெக்டர் காலனி உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள மாதா கோவில் தெரு மற்றும் அண்ணா நெடும்பாதையை இணைக்கும் பகுதியில் அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயில், பொதுமக்கள் கடப்பதற்கு நான்கு அடி அகலம் கொண்ட தரைப்பாலம் உள்ளது.

இப்பகுதியில் வசிப்போர் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தைக் கடந்து, பெரியார் பாதை வழியாக சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர்.

இந்த தரைப்பாலம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது சிதிலமடைந்துள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையின் போது, தரைப்பாலத்தின் இருபுறங்களில் இருந்த பக்கவாட்டு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

தற்போது, பலகட்ட போராட்டத்திற்குப் பின், இங்கு 1.03 கோடி ரூபாயில் புதிய தரைப்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு, மீண்டும் பணிகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து தரைப்பாலத்தின் அருகில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நிலையில், தற்போது பாலத்தின் 'பில்லர்' மற்றும் கான்கிரீட் சேதமடைந்து, கூவத்தில் விழும் நிலையில் உள்ளது.

குறிப்பாக, அந்த பாலத்தின் மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.

மேலும், இரவில் அவ்வழியே செல்பவர்கள் பீதியுடன் செல்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் மட்டும், வேட்பாளர்கள் புதிய பாலம் அமைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் செல்கின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய பாலம் அமைக்க, 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், முதல் பூமி பூஜை மட்டும் போடப்பட்டது.

கடந்த ஆண்டு, மேயரும் ஆய்வு செய்தார்.

அதன் பின், எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, மீண்டும் 1.03 கோடி ரூபாய்க்கு புதிய டெண்டர் விடப்பட்டு, பணிகள் நிலுவையில் உள்ளன.

மீண்டும் ஒரு பூமி பூஜைக்காக பாலம் காத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும், பாலத்தில் நடந்து செல்லும் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

குறிப்பாக, இந்த பகுதியில் இறப்பவர்களின் உடலைக் கூட எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறோம். உடல்களை கொண்டு செல்லும் போது, எம்.எச்., காலனி அல்லது கலெக்டர் காலனி வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல ஆட்சிகள் மாறினாலும், எந்த பயனும் இல்லை.

அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், இதை கண்டுகொள்வது கிடையாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து பாலத்தை இடித்து, ஆட்டோ ஒன்று செல்லும் அளவிற்காவது பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us