Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

ADDED : ஜூன் 06, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், பாளூரில், போர் வீரன் தன் தலையை கத்தியால் வெட்டி பலி கொடுக்கும் அரிகண்டம் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் தலைவர் வெற்றித்தமிழன் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர்கள், செங்கல்பட்டு பாலாறு கரைப்பகுதிகளில் கள ஆய்வு செய்தனர்.

அதில், பாளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பல்லவர் கால சிவன் கோவில் அருகில், சாலையோரம் மண்ணில் புதைந்த நிலையில் சிலை இருப்பதை அறிந்தனர். அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அது அரிகண்டம் சிலை என்பது தெரிந்தது.

இந்த சிலையில், ஒரு வீரன் தன் வலது கையில் ஏந்திய குறுவாளால் கழுத்தை அரிந்து கொள்வது போலவும், இடதுகை குறுவாளை, நிலத்தில் ஊன்றி தன்னை தாங்கியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நின்ற கோலத்தில் உள்ள இந்த வீரன் சிலை, 3.5 அடி உயரமாக உள்ளது. வீரனின் பின்தலையின் இடப்பக்கம் வளைந்த கொண்டையும், கழுத்தில் ஆபரணங்களும் உள்ளன. இடையில் ஆடை, சன்னவீரம் அணிந்துள்ளார். இரு கால்களிலும் அணிகலன்கள் உள்ளன.

இந்த சிலையில் உள்ள ஆபரணங்கள், உடை உள்ளிட்டவற்றின் அமைப்பு, விஜயநகர பேரசு காலமான 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, போரில் வெற்றி பெறவோ, நோய் வாய்ப்பட்ட அரசனோ, அரச குடும்பத்தினரோ நலமடைய வேண்டும் என்பதற்காக, ஊர் மக்கள் முன்னிலையில், வீரர் ஒருவர் தன் தலையை வெட்டி தெய்வத்துக்கு காணிக்கை அளிக்கும் நிகழ்வை அரிகண்டம் என்பர். அதாவது, உயர்ந்தோரின் உயிருக்குப்பதில், தன் உயிரை ஈவது உயர்ந்த பண்பாக கருதப்பட்டது.

அப்படி, தன் தலையை தானே காணிக்கை ஆக்கும் வீரருக்கு சிலை வைத்து, அவரின் குடும்பத்துக்கு, அந்த பகுதியில் விளை நிலைங்கள், ஆடு, மாடுகளை தானமாக வழங்கி அரசர்கள் கவுரவிப்பது வழக்கம்.

இந்த பகுதியில், 15 ----16ம் நுாற்றாண்டில் அரிகண்டம் நிகழ்ந்ததற்கு சான்றாக இந்த சிலை உள்ளது. இதை, வருவாய்த்துறையினர் மீட்டு, அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us