Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்

'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்

'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்

'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்

UPDATED : ஜூலை 21, 2024 11:03 AMADDED : ஜூலை 21, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, மணிமேகலைப் பிரசுரம் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் இணைந்து நடத்தின.

ஆன்மிக அறிஞரும், எழுத்தாளருமான சஞ்சீவி ராஜா சுவாமிகள் தலைமை வகித்தார். மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முன்னிலை வகித்தார். மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், பிரபல மனிதநேய எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் டி.வி.ராமசுப்பையரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வானதி பதிப்பகம் இயக்குனர் ராமநாதன், கவிதா பதிப்பகம் பதிப்பாளர் சொக்கலிங்கம், திரைப்பட இயக்குனர் வசந்த், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி., பெரியய்யா ஆகியார், அன்னாரது திருவுருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில், 'டி.வி.ராமசுப்பையரின் வாழ்க்கை வரலாறான, 'கடல் தாமரை' நுாலை, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளிலும் பாட நுாலாக வைக்க வேண்டும்' என, தமிழக அரசை வலியுறுத்தினர்.

டி.வி.ஆரின் பங்களிப்பு


இதில், எழுத்தாளர் சிவசங்கரி பேசியதாவது:

டி.வி.ஆர்., என அறியப்படும் டி.வி.ராமசுப்பையர், 1951ல் 'தினமலர்' நாளிதழை முதல் முதலாக கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் துவக்கினார். பின், திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களில் வளர்த்து, மிகப்பெரிய நிறுவனமாக மாற்றி உள்ளார்; அதை ஒரு தவமாக செய்துள்ளார்.

டி.வி.ஆருக்கு அரசியல், மதம் இல்லை. அவர் ஒரு பக்கம் நாளிதழ் நடத்தினார்; மறு பக்கம் சுதந்திர போராட்ட வீரர். ஹரிஜன் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைய வேண்டும் என்பதற்கு, டி.வி.ஆரின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழ் சீர்திருத்த எழுத்துக்களை, அரசு அறிமுகப்படுத்தும் முன், தினமலர் நாளிதழில் பயன்படுத்த துவங்கினார்; அவர் போட்ட விதை, இன்று ஆலமரமாக மாறியுள்ளது.

எனக்கு தெரிந்து, எந்த பத்திரிகையும் நான்காவது தலைமுறையாக யாரிடமும் இல்லை. அடுத்து டி.வி.ஆர்., மகன் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மிக அருமையாக செயல்பட்டார். நாணயவியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு நிபுணராக விளங்கினார்.

அதற்கு, மத்திய அரசு மற்றும் இங்கிலாந்தில் உள்ள ராயல் நாணய கழகம் அவரை கவுரவித்துள்ளன. தற்போது, 'தினமலர்' ஆசிரியராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி மகன் டாக்டர் கி.ராமசுப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன் முகநுாலில் பதிவான இரு விஷயங்களை கூற விரும்புகிறேன்.

அதில், சில ஆண்டுகளுக்கு முன் வரை சரித்திர தொடர்கதை எழுதியவரும், 'குங்குமம்' வார இதழ் பொறுப்பாசிரியருமான கே.என்.சிவராமன் முகநுாலில் பதிவிட்டிருந்ததாவது:

அந்த காலத்தில், ஒரு கதைக்கு 50 - 100 ரூபாய் தான் கிடைக்கும். தன் மகன் கல்லுாரி கட்டணத்தை கட்ட பணமின்றி தவித்துள்ளார் கே.என்.சிவராமன். தான் வேறு பத்திரிகையில் பணியாற்றினாலும், தன் நிலை குறித்து தற்போதைய 'தினமலர்' ஆசிரியர் ராமசுப்புவிடம் தெரிவித்துள்ளார்.

அவரும் வெறுமனே பணம் அளித்து உதவி செய்யாமல், ஆறு மாதத்திற்கு ஒரு சிறுகதை என, மூன்று ஆண்டுகளில் ஆறு சிறுகதை எழுத வைத்து, அந்த பணத்தில் மகனின் கல்லுாரி கட்டணத்தை கட்ட வைத்தார்.

தன் தொழிலை வைத்து, தான் சம்பாதித்து மகன் படிப்பிற்கு பணம் கட்டினோம் என்ற சந்தோஷத்தை அவருக்கு அளித்தார். இடது கை செய்வது வலது கை தெரியக் கூடாது என்பதற்கு உதாரணம் 'தினமலர்' ஆசிரியர் கே.ராமசுப்பு.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தானம், தர்மம்


இரண்டாவது பதிவை போட்டவர், என் நண்பர் எழுத்தாளர் ரவி பிரகாஷ். அவர், வேலை பார்த்த பத்திரிகை நின்று போனது. இதனால், வீட்டு வாடகை மற்றும் குடும்பம் நடத்த அவருக்கு அந்த மாதம், 1,200 ரூபாய் தேவைப்பட்டது.

தன் நிலை குறித்து எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்பவரிடம் தெரிவித்தார். அவர், 'தினமலர் ராமசுப்புவிடம் பேசுகிறேன்; அவரை போய் பாருங்கள்' எனக் கூறியுள்ளார். அலுவலகம் சென்று ராமசுப்புவை சந்தித்த போது, இரண்டு நாட்களில் நான்கு சிறு கதை எழுத வைத்து, அதற்கு சன்மானமாக, 2,000 ரூபாய் கொடுத்தார்.

அந்த காலத்தில், ஒரு சிறுகதைக்கு, 500 ரூபாய் கிடைக்காது. என் தேவை உணர்ந்து, பணமாக கொடுத்திருந்தால் என் தன்மானத்திற்கு இழுக்கு என நினைத்து, கதை எழுத வைத்து, அதற்கு சன்மானமாக என் தேவைக்கு அதிகமான பணத்தை கொடுத்தார். அவர் ஒரு மாமனிதர்.

இவ்வாறு ரவி பிரகாஷ் பதிவிட்டிருந்தார்.

தானம், தர்மம் இரண்டும் வேறு, ஒருவர் உதவி கேட்டு அவருக்கு உதவுவது தானம்; உதவி கேட்காமல் அவர் நிலை உணர்ந்து செய்வது தர்மம். டி.வி.ஆர்., தலைமுறையினரே தர்மவான்களாக உள்ளனர்.

இவ்வாறு எழுத்தாளர் சிவசங்கரி பேசினார்.

தாரக மந்திரம்


விழாவில், மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் பேசியதாவது:

டி.வி.ராமசுப்பையர் பல ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரத்தில் 'தினமலர்' நாளிதழை துவக்கினார். அந்த காலத்தில் தினசரி தமிழ் நாளிதழ் நடத்துவது மிகவும் கடினமான காரியம்.

அவர் எந்த அளவிற்கு நாளிதழை சிறப்பாக நடத்தினார் என்பதை, அவரது நான்காவது தலைமுறையினரும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

எவருக்கும் அஞ்சாதவர் டி.வி.ராமசுப்பையர். பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரம் கிடைப்பது என்பது மிக முக்கியம். அரசு விளம்பரம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என, இன்றைய ஆசிரியர் கி.ராமசுப்பு, துணிச்சலாக நாளிதழை நடத்தி வருகிறார்.

என் தந்தை தமிழ்வாணனின் தாரக மந்திரமான, 'துணிவே துணை' என்பதை, தன்னுடைய தாரக மந்திரமாக, 'தினமலர்' ஆசிரியர் ராமசுப்பு செய்து வருகிறார். இதை அவரது தாத்தா அஞ்சலி நிகழ்வில் கூறுவது, பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டு


மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசியதாவது:


பெரியவர்கள் தான் இந்த நாட்டின் வழிகாட்டிகள், இந்த நாட்டின் சின்னங்கள். பத்திரிகை துறையில் மிக பெரிய ஜாம்பவானாக 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் போன்றவர்களை நாம் நினைவுகூர்வது, வருங்கால தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அரசாங்கம் விளம்பரம் கொடுத்ததால், போற்றி பாராட்டுவதும், விளம்பரம் கொடுக்கவில்லை என்றால், அப்படியில்லாமலும், எது உண்மையோ அதை சொல்லும் ஒரே நாளிதழ் 'தினமலர்' மட்டுமே. தமிழகத்தில் முதுகெலும்பு உள்ள ஒரே நாளிதழாக உருவாக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்து நிகழ்வில், டி.வி. ராமசுப்பையருக்கு பாரத் ரத்னா பத்ம விருதுகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆன்மிக அறிஞர் மற்றும் எழுத்தாளர் சஞ்சீவி ராஜா சுவாமிகள் பேசியதாவது :


தமிழை தொட்டவர்கள் அழிய மாட்டார்கள். அதற்கு உதாரணம், டி.வி.ஆர்., இன்னும் நான்கு தலைமுறையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்; இனியும் 40 தலைமுறைக்கு வாழ்ந்துக் கொண்டிருப்பார்.

தமிழை தொட்டவர் தழைத்தும் வாழ்வார், நீண்ட ஆயுளுடன் வாழ்வார். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு, தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us