/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரண்டாவது நாளாக மழைநீர் சூழ்ந்து பாதிப்பு இரண்டாவது நாளாக மழைநீர் சூழ்ந்து பாதிப்பு
இரண்டாவது நாளாக மழைநீர் சூழ்ந்து பாதிப்பு
இரண்டாவது நாளாக மழைநீர் சூழ்ந்து பாதிப்பு
இரண்டாவது நாளாக மழைநீர் சூழ்ந்து பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:42 AM

சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல், ஒரு மணி நேரம் வரை கன மழை பெய்தது. தி.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால், பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாலம் கீழே தண்ணீர் தேங்கியது. நேற்று காலை வரை தேங்கிய தண்ணீர் வடியவில்லை.
இதனால், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர், சுரங்கப்பாலத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டு நெரிசல் உண்டானது.
காலை 9:00 மணிக்கு மேல், மாநகராட்சியினர் மோட்டார் வைத்து, சுரங்கப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தினர்.
காலை 11:00 மணிக்கு பின், அப்பகுதியில் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.
ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் பகுதியில், 26, 27 உள்ளிட்ட சில தெருக்களில், ஐந்திற்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
நேற்று மாலை பெய்த மழையில் நங்கநல்லுார் எம்.ஜி.ஆர்., சாலையில் பெரிய வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, ஏ.ஜி.எஸ்., காலனி மூன்றாவது தெருவில் ஒரு காலனியிலும், ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. இவற்றை வெட்டி அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதேபோல, முகலிவாக்கம் பகுதியில் பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இரு நாட்களாக பெய்த மழை காரணமாக, பல சாலைகள் சகதி நிறைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக, மணப்பாக்கம் - முகலிவாக்கம் பிரதான சாலை, கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
'திகில்' பயணம்
அதேபோல், திருவேற்காடு நகராட்சி நுாம்பல் பிரதான சாலை, 1.5 கி.மீ., துாரம் உடையது. 'கரணம் தப்பினால் மரணம்' என்பது போல், மோசமான நிலையில் உள்ள இச்சாலையின் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. புதைகுழி போல் மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் திகில் பயணம் செய்கின்றனர்.
சாலையில் தேங்கும் மழைநீர், அங்குள்ள வடிகாலில் வடிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
திருவொற்றியூர் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் பணி காரணமாக, ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 9:20 மணி முதல் 11:00 மணி வரை, இடைவிடாது பெய்த மழை, தற்காலிக பேருந்து நிலையத்தை சூழ்ந்து, குளம் போல் மாறியது. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் கடும் அவதியுற்றனர்.
எண்ணுார் பேருந்து நிலைய வளாகத்திலும் குளம் போல் மழைநீர் தேங்கியது. வேறு வழியின்றி, பேருந்து நிலையம் வெளியே காத்திருந்து, பயணியர் பேருந்து சேவையை பயன்படுத்தினர்.
- நமது நிருபர்கள் -