வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை
வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை
வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை
ADDED : ஜூன் 07, 2024 12:20 AM

சென்னையில், வாகன போக்குவரத்துக்கு ஏற்ப கட்டமைப்பு இல்லை. மெட்ரோ ரயில் பணி, குடிநீர் - பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணிகள் மற்றும் பிற சேவை துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லாததால், சாலைகள் கூறுபோடப்படுகின்றன. இப்பணிகளால் சாலையில் சிறிய முதல் பெரிய பள்ளங்கள் வரை விழுந்துள்ளன. இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும் சிரமம் தொடர்கிறது.
இந்நிலையில், இரு நாட்களாக சென்னையில் பெய்த மழையால், மோசமான சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
கோடம்பாக்கம் - போரூர் போக்குவரத்திற்கு முக்கிய சாலையாக ஆற்காடு சாலையில், குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றதால், கடும் நரிசல் ஏற்பட்டது.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையும், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையும் இணையும் பகுதியில், மேம்பாலம் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் நேர் திசையிலும், இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கியும், வலதுபுறம் திரும்பி வண்டலுார் நோக்கியும் செல்கின்றன.
அதேபோல், குன்றத்துாரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி செல்லும் வாகனங்கள் நேர் திசையிலும், இடது மற்றும் வலதுபுறம் திரும்பி வண்டலுார், பூந்தமல்லி நோக்கியும் செல்கின்றன. இதனால், மேம்பாலத்தின் கீழ் நான்கு சாலை சந்திப்பு அதிக போக்குவரத்து உடைய பகுதியாக உள்ளது.
வாகனங்கள் கட்டுப்பாடின்றி, தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. வாகனங்கள் நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு காலை, மாலை நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுகிறது.
தாம்பரம் மாநகராட்சி, மேற்கு தாம்பரத்தில், கிஷ்கிந்தா - காந்தி - ராஜாஜி சாலைகள் சந்திப்பு கடந்து, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில், பாலாற்று குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்த குழாயில் உடைப்பு இருப்பதால், பாலாற்று நீரேற்று நிலையத்தில் பம்ப் செய்யும்போது, இந்த சந்திப்பு பகுதி குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.
ஒரு மாதமாக தொடர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் சாலை சீர்குலைந்து, குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் தினமும் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
- நமது நிருபர்கள் -