/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இ.பி., ஆபீஸ் - கீழ்ப்பாக்கம் இடையில் கூடுதல் மின்சாரம் கையாள வழித்தடம் இ.பி., ஆபீஸ் - கீழ்ப்பாக்கம் இடையில் கூடுதல் மின்சாரம் கையாள வழித்தடம்
இ.பி., ஆபீஸ் - கீழ்ப்பாக்கம் இடையில் கூடுதல் மின்சாரம் கையாள வழித்தடம்
இ.பி., ஆபீஸ் - கீழ்ப்பாக்கம் இடையில் கூடுதல் மின்சாரம் கையாள வழித்தடம்
இ.பி., ஆபீஸ் - கீழ்ப்பாக்கம் இடையில் கூடுதல் மின்சாரம் கையாள வழித்தடம்
ADDED : ஜூன் 20, 2024 12:33 AM
சென்னை, சென்னையில் கூடுதலாக, 200 மெகா வாட் மின்சாரம் கையாளும் வகையில், அண்ணா சாலை மின் வாரிய தலைமை அலுவலக வளாகம் - கீழ்ப்பாக்கம் இடையில், 230 கிலோ வோல்ட் திறனில் கேபிள் மின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வதற்கான சோதனை நேற்று நடந்தது.
சென்னையில் புதிய கட்டுமானம், தொழில் நிறுவனங்களால் மின் தேவை அதிகரித்து வருகிறது.
அதற்கு ஏற்ப, கூடுதல் மின்சாரத்தை கையாள புதிய மின் வழித்தடங்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 230 கி.வோ., திறனில் துணைமின் நிலையம் உள்ளது. இதற்கு, மணலி, 400 கி.வோ., துணைமின் நிலையத்தில் இருந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள, 230 கி.வோ., துணைமின் நிலையம் வாயிலாக மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.
மின் வாரிய அலுவலக துணைமின் நிலையத்தில் இருந்து மயிலாப்பூர், ஓமந்துாரார் அரசினர் தோட்டம், பெல்ஸ் ரோடு, ராயப்பேட்டை உட்ஸ் ரோடு, அண்ணா சாலை ஆகிய இடங்களில் உள்ள, 33 கி.வோ., துணைமின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள, 230 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் மற்றும் கொரட்டூர் துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வருகிறது.
மின் வாரிய அலுவலக துணைமின் நிலையத்தில் இருந்து கீழ்ப்பாக்கம், 230 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு, 6 கி.மீ., தரைக்கு அடியில், அதே திறனில் கேபிள் மின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட செலவு, 30 கோடி ரூபாய்.
அந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வதற்காக, கேபிள் திறன் உறுதியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கும் சோதனை, மின் வாரிய துணைமின் நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த புதிய வழித்தடத்தால் சென்னையில், 200 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக கையாள முடியும்.
மேலும், மணலியில் இருந்து மின் வாரிய அலுவலக துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் வருவது தடைபட்டாலும், கீழ்ப்பாக்கம் வழியாக மின்சாரம் எடுத்து வரப்படும். கீழ்ப்பாக்கத்தில் தடைபட்டாலும், மணலியில் இருந்து அண்ணா சாலைக்கு மின்சாரம் எடுத்து வரப்படும்.