/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையை புனரமைக்காத ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை சாலையை புனரமைக்காத ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
சாலையை புனரமைக்காத ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
சாலையை புனரமைக்காத ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
சாலையை புனரமைக்காத ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
ADDED : ஜூலை 25, 2024 12:23 AM
சென்னை, நான்கு மாதங்களாகியும் 1.50 கி.மீ., சாலையை புனரமைக்காத ஒப்பந்த நிறுவனத்தை, கருப்பு பட்டியலில் சேர்க்க நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்துள்ளது.
செங்குன்றம் அருகே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, 6 கி.மீ., பயணித்து, வடக்கு உள்வட்ட சாலையில் இணைகிறது.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக, சென்னை, எண்ணுார் துறைமுகங்கள், மணலி தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், இச்சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
சென்னை மாநகராட்சி எல்லையிலும், மற்றொரு பகுதி திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில், புழல் ஏரி மற்றும் ரெட்டேரி உபரிநீர், இச்சாலையில் தேங்குவது வழக்கம். கடந்தாண்டு, 'மிக்ஜாம்' புயலால், இரண்டு வாரங்களுக்கு மேலாக மார்பு அளவிற்கு நீர் தேங்கி, இச்சாலை சேதமடைந்தது.
தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, நான்கு கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. லோக்சபா தேர்தலுக்கு முன், சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்திடம், பிப்., மாதம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. 'தேர்தலுக்கு முன்பாக சாலை பணியை முடிக்க வேண்டும்' என, ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மார்ச் மாதம் பணிகளை துவங்கிய ஒப்பந்த நிறுவனம், இன்னும் முடிக்கவில்லை. பல இடங்களில் சாலை 'மில்லிங்' செய்யப்பட்டு அப்படியே விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, வடகரை, கிராண்ட்லைன், வடப்பெரும்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் புனரமைக்கப்பட்ட சாலையும், மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், புழுதி பறந்து காற்று மாசு அதிகரித்து உள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் கேள்வி எழுப்பிய போது, சென்னை குடிநீர் வாரியம், புழல் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம், திடீர் மழை ஆகியவற்றை காரணம் காட்டி, ஒப்பந்த நிறுவனம் மழுப்பி வருகிறது.
இதையடுத்து, குறித்த காலத்திற்குள் பணியை முடிக்காத ஒப்பந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால், அடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஏற்படும்.