/உள்ளூர் செய்திகள்/சென்னை/கல்லுாரி முதல் நாள் கொண்டாட்டம் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் 4 பேர் சிக்கினர்கல்லுாரி முதல் நாள் கொண்டாட்டம் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் 4 பேர் சிக்கினர்
கல்லுாரி முதல் நாள் கொண்டாட்டம் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் 4 பேர் சிக்கினர்
கல்லுாரி முதல் நாள் கொண்டாட்டம் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் 4 பேர் சிக்கினர்
கல்லுாரி முதல் நாள் கொண்டாட்டம் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் 4 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 20, 2024 12:37 AM
புதுவண்ணாரப்பேட்டை, கோடை விடுமுறைக்கு பின், கல்லுாரி இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள், நேற்று துவங்கின. ஒவ்வொரு ஆண்டும் கல்லுாரி துவக்கத்தில், தடையை மீறி மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, பேருந்து மற்றும் ரயில்களில் கல்லுாரிக்கு வரும் மாணவர்களின், 'பஸ் டே' கொண்டாட்டத்தை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், பஸ் டே கொண்டாடுவதற்காக மாநிலக் கல்லுாரி மாணவர்கள், டோல்கேட் பேருந்து நிலையத்தில் குவிந்ததை அறிந்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு கல்லுாரி மாணவர்கள், பேருந்தில் ஏறி ஆடி, பாடி ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நால்வரையும் சோதனையிட்ட போது, அவர்களிடம் இருந்து நான்கு கத்திகள் சிக்கின. விசாரணையில், மாநிலக் கல்லுாரி மாணவர்களான தாம்பரத்தை சேர்ந்த பாலாஜி, 18, பொன்னேரியைச் சேர்ந்த இசக்கியேல் எட்வின்பால், 18, ஜனகன், 18, கவரப்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன், 19, என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், கத்திகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 50க்கு மேற்பட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை 'ஓபன் டே' தலைப்பில் பேனர் மற்றும் மாலையுடன் கல்லுாரிக்குள் நுழைய முயன்றனர். இதற்கிடையில், முன்னதாகவே கல்லுாரி நிர்வாகம் பிரதான நுழைவாயில் கதவை பூட்டியது.
நுழைவாயிலில் குவிந்த மாணவர்கள், சில மணிநேரம் கோஷங்களை எழுப்பிய பின் கலைந்து சென்றனர். கல்லுாரி துவங்கிய முதல் நாளே பேருந்தில் மாணவர்களின் அட்டகாசம், பல இடங்களில் பயணியரிடையே அவதியை ஏற்படுத்தியது.