ADDED : ஜூலை 30, 2024 01:03 AM

தாம்பரம், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, வண்டலுார் உயிரியல் பூங்கா நிர்வாகம் டபுள்யு.டபுள்யு.எப்., இந்தியாவுடன் இணைந்து, பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்று முன்தினம், பூங்காவில் உள்ள புலிகளின் அடைப்பிடத்திற்கு அருகில், பார்வையாளர்களுக்கு செயல்பாட்டு அடிப்படையிலான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், குழந்தைகளுக்கு வண்ணங்களை கொண்டு கை அச்சிடுதல், புலிகளின் வாழ்விடத்தை கண்டறிதல், வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், புலிகளை பற்றிய முழு குறிப்பு எழுதுதல் மற்றும் விழிப்புணர்வு உரையாடல் ஆகியவை நடத்தப்பட்டன.
இரண்டாம் நாளான நேற்று, 'இன்னர் வீல் கிளப் பீனிக்ஸ்' என்ற சங்கமானது, விலங்கு தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், நேற்று ஒரு நாள், 29 புலிகளை தத்தெடுத்து, அதற்கான காசோலையை, பூங்கா நிர்வாகத்திடம் வழங்கியது.
தொடர்ந்து, ஓட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பூங்கா பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.