ADDED : ஜூன் 01, 2024 12:29 AM
ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூர் --- பெரியபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த கடையை சுற்றி தனியார் மருத்துவமனை, திருமண மண்டபம், சர்ச், திரையரங்கம், தனியார் பள்ளிகள், திருநின்றவூர் காவல் நிலையம், பேருந்து நிறுத்தம் மற்றும் சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதன் சுற்றுவட்டாரத்தில் நடுக்குத்தகை, பாலாஜி நகர், நத்தமேடு, ஆலத்துார், பாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் 5,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
பெரியபாளையம் நெடுஞ்சாலை வழியாக திருநின்றவூரில் இருந்து பாக்கம், பெரியபாளையம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்வதால், கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.
மது அருந்த வருபவர்களால் பொதுமக்கள், தினமும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த மதுபான கடையால் பெண்கள், பள்ளி மாணவ - மாணவியர், குழந்தைகள் இப்பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், இந்த கடையை இடமாற்றம் செய்வதாக, மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு உறுதி அளித்து இருந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் கடந்தாண்டு ஜூன் மாதம் விரிவான செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, அதே கடை உட்புறமாக மாற்றப்பட்டு, 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருகிறது.
அதேபோல், சென்னை -- திருத்தணி நெடுஞ்சாலை அருகே, நடுக்குத்தகை ஊராட்சிக்கு உட்பட்ட வி.கே.நகர் சுடுகாடு ஒட்டி செயல்படும் டாஸ்மாக் கடையும், தொடர்ந்து செயல்படுகிறது.
இந்த கடை அருகே குடியிருப்புகள் மற்றும் திருநின்றவூர் பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன.
திருநின்றவூர் போலீசார், தொடர்ந்து கண்டும் காணாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இவ்விரண்டு கடைகளையும், வேறு இடத்திற்கு மாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.