/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விளையாட்டுகளில் ஜொலிக்க முடியாமல் மாணவர்கள்... மன உளைச்சல்! சென்னை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுகோள் விளையாட்டுகளில் ஜொலிக்க முடியாமல் மாணவர்கள்... மன உளைச்சல்! சென்னை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுகோள்
விளையாட்டுகளில் ஜொலிக்க முடியாமல் மாணவர்கள்... மன உளைச்சல்! சென்னை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுகோள்
விளையாட்டுகளில் ஜொலிக்க முடியாமல் மாணவர்கள்... மன உளைச்சல்! சென்னை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுகோள்
விளையாட்டுகளில் ஜொலிக்க முடியாமல் மாணவர்கள்... மன உளைச்சல்! சென்னை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 27, 2024 11:15 PM

சென்னை : பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில், சென்னை மாவட்டத்தை பிரிக்காமல் நடத்துவதால், தகுதியான வீரர்கள் போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, மன உளைச்சல் அடைகின்றனர். இதனால், அதிக பள்ளிகள் உள்ள சென்னை மாவட்டத்தை, இரண்டு பிரிவுகளாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பள்ளி அளவிலான போட்டிகள் நடக்கும் நிலையில், அடுத்த மாதம் குறுவட்ட போட்டிகள் துவங்க உள்ளன. செப்டம்பரில், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
சென்னை மாவட்டத்தில், மற்ற மாவட்டங்களைவிட, ஐந்து மடங்கு அதிகமாக பள்ளிகள் உள்ளதால், ஏராளமான மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஆனால், குறைந்த பள்ளிகள் உடைய பிற மாவட்டங்களுக்கு சமமாக, சென்னைக்கும் ஒரே பிரிவில் மாவட்ட போட்டிகள் நடத்துவதால், பல்வேறு நடைமுறை பிரச்னை ஏற்படுகிறது.
அத்துடன், தகுதியான வீரர்களின் பதக்க கனவு பறிபோவதால், அவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர்.
இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
பெருநகர விரிவாக்கத்தின் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பள்ளிகள், சென்னை வருவாய் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன. இதனால், அண்டை மாவட்டங்களில் பள்ளிகள் குறைந்து, சென்னையில் அதிகரித்துள்ளன.
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில், மண்டல அளவில் தேர்வாகும் ஒரு மாணவர், மாவட்ட அளவில், மூன்று மண்டலங்களுடன் மட்டும் விளையாடி வெற்றி பெற்றாலே, மாநில போட்டிக்கு தகுதி பெறுகிறார்.
ஆனால், சென்னையில் மண்டல அளவில் தேர்வாகும் ஒரு மாணவர், ஒரே நாளில், 15 மண்டலங்களுடன் விளையாடி வெற்றி பெற்றால் தான், மாநில போட்டிக்கு தகுதி பெற முடியும்.
அதிக போட்டிகளால் மாணவர்கள் மிகவும் சோர்வடைகின்றனர். மன உளைச்சலில் பதக்க வாய்ப்புகளை தவறவிடும் நிலை உள்ளது.
சென்னையில், 23 மண்டல அணிகள் மோதி, 22 அணிகள் வெளியேறுகின்றன. பிற மாவட்டங்களில், நான்கு மண்டல அணிகள் மோதி, மூன்று அணிகள் தான் வெளியேறுகின்றன.
சென்னையில் ஒருவர், 10 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அவரால் மாநில போட்டிக்கு தகுதி பெற முடியாது.
பிற மாவட்டத்தில், மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலே, மாநில போட்டிக்கு தகுதி பெற்று விடுகிறார். இது விளையாட்டு போட்டிகளில், வீரர்களின் தகுதியில் சமநிலையற்றதாக உள்ளது.
சென்னை மாவட்டத்தில் ஒரு மாணவர் அல்லது ஒரு அணி, மாநில போட்டிக்கு தகுதி பெற, குறைந்தபட்சம், 12 போட்டிகளிலாவது பங்கேற்க வேண்டும்.
அதுவும், ஒரே நாளில் இவ்வளவு போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், மாணவர்களுக்கு அதிக காயம் ஏற்படுவதுடன், உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.
மேலும், நீண்ட துாரத்தில் இருந்து மாணவர்களை, சென்னையில் போட்டி நடக்கும் இடத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. ஒரே இடத்தில் 23 அணிகளை ஒன்றிணைந்து, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பது, பெரும் சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.