/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திறப்பு விழா நடத்தி ஓராண்டிற்கு பிறகும்... இழுத்தடிப்பு! துரைப்பாக்கத்தில் குடிநீர் இணைப்பு குளறுபடி திறப்பு விழா நடத்தி ஓராண்டிற்கு பிறகும்... இழுத்தடிப்பு! துரைப்பாக்கத்தில் குடிநீர் இணைப்பு குளறுபடி
திறப்பு விழா நடத்தி ஓராண்டிற்கு பிறகும்... இழுத்தடிப்பு! துரைப்பாக்கத்தில் குடிநீர் இணைப்பு குளறுபடி
திறப்பு விழா நடத்தி ஓராண்டிற்கு பிறகும்... இழுத்தடிப்பு! துரைப்பாக்கத்தில் குடிநீர் இணைப்பு குளறுபடி
திறப்பு விழா நடத்தி ஓராண்டிற்கு பிறகும்... இழுத்தடிப்பு! துரைப்பாக்கத்தில் குடிநீர் இணைப்பு குளறுபடி
ADDED : ஜூலை 18, 2024 12:03 AM

சென்னை துரைப்பாக்கத்தில், 10 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த குடிநீர் திட்டத்தை, 2023 மே மாதம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், முந்தைய ஒப்பந்த நிறுவனம் ஏற்படுத்திய கோளாறால், மூன்று வார்டுகளில் 630 தெருக்களில் உள்ள வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம், ஓ.எம்.ஆரில், துரைப்பாக்கத்தில் உள்ள, 193,195,196 ஆகிய வார்டுகளில், 630 தெருக்கள் உள்ளன. இங்குள்ள, 55,000த்துக்கும் மேற்பட்ட வீடுகளில், 2.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த மூன்று வார்டுகளில், வீட்டு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு, முதலில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணி, 50 கி.மீ., துாரத்திற்கு, கடந்த 2012ல் துவக்கப்பட்டது. இப்பணியை, ஜி.கே.சி.விஸ்வா என்ற நிறுவனம் செய்தது.
பணி நிறுத்தம்
இத்திட்டத்தின் கீழ், 193வது வார்டு பிள்ளையார்கோவில் தெருவில், 16 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், செகரட்ரியேட் காலனியில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை தொட்டியும் கட்டும் பணி நடந்தது.
நிர்வாக குளறுபடி, ஒப்பந்த நிறுவனத்தின் வீழ்ச்சி போன்ற காரணத்தால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ஜி.கே.சி.விஸ்வா நிறுவனத்திற்கு, வாரியம் தடை விதித்தது.
இதனால், மூன்று ஆண்டுகள் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, 2019ம் ஆண்டு, கேயம் என்ற நிறுவனத்தை வாரியம் நியமித்தது. அப்போது, மீதமுள்ள 20 கி.மீ., துாரம் குழாய் பதித்து திட்டத்தை முடிக்க, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆனால், முந்தைய நிறுவனம் பதித்த குழாய்கள் எங்குள்ளது என கண்டுபிடிக்க முடியாமல், புதிய நிறுவனம் திணறியது. போதிய ஆழத்தில் குழாய்கள் பதிக்காதது, நீரோட்டமின்மை, நீர்த்தேக்க தொட்டி கட்டியதில் குளறுபடி, குழாய்கள் சேதம் போன்ற பல்வேறு பிரச்னைகளும் இருந்தன.
குறிப்பாக, பிரதான குழாயில் இருந்து வீடுகள், வணிக வளாகத்தின் எல்லை வரை கொண்டு செல்லும் குழாய்களை, அரை அடி ஆழத்தில் பதித்ததால், வாகனங்கள் ஏறி பெரும்பாலான குழாய்கள் சேதமடைந்திருந்தன.
குடிநீர் கசிவு
அதற்கு மேல் சாலை அமைத்ததால், மீதமிருந்த குழாய்களும் பயனற்று போயின. மேலும் வடிகால், தொலைத்தொடர்பு, மின்சார கேபிள் பதிப்பு பணிகளாலும், பல குழாய்கள் சேதமடைந்தன.
இதனால், ஒவ்வொரு தெருக்களிலும், குறைந்தது 10 இடங்களிலாவது குடிநீர் கசிவு ஏற்பட்டது. இதனால், குடிநீர் திட்ட பணி முழுமை பெறவில்லை.
இதற்கிடையில், கடந்த 2023 மே மாதம் இந்த குடிநீர் திட்டத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, வார்டு மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், பணிகள் முழுமை பெறாததால், குடிநீர் இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால், 10 ஆண்டுகள் காத்திருந்து இணைப்பு கிடைக்கும் என நினைத்த மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது, குடிநீருக்கு அதிக தொகை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மே மாதம், இந்த மூன்று வார்டுகளிலும், 280 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டத்தை, முதல்வர் துவங்கி வைத்தார்.
இத்திட்டத்தை, வரும் 2027 மே மாதம் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இத்திட்டமும், குடிநீர் திட்டம் போல் இழுபறியில் சிக்குமோ என, பகுதிவாசிகளிடம் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
---- -நமது நிருபர் --