/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்புகள்...அகற்றம் !:நெரிசலை தீர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கைதாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்புகள்...அகற்றம் !:நெரிசலை தீர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்புகள்...அகற்றம் !:நெரிசலை தீர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்புகள்...அகற்றம் !:நெரிசலை தீர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்புகள்...அகற்றம் !:நெரிசலை தீர்க்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
ADDED : ஜூன் 16, 2024 12:34 AM

தாம்பரம்:சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை, நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஜி.எஸ்.டி., சாலை, தாம்பரம் - வேளச்சேரி மற்றும் முடிச்சூர் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள், நேற்று அகற்றப்பட்டன.
தாம்பரத்தில், காந்தி சாலை சிக்னல் முதல் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்கு பகுதியில், 'ஒர்க் ஷாப்' மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், 'டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த 'ஒர்க் ஷாப்' கடைகளுக்கு, பழுதை சரி செய்வதற்காகவும், உதிரி பாகங்களை மாற்றுவதற்காகவும், ஏராளமான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன.
அவ்வாறு வரும் வாகனங்களை, கடைக்காரர்கள், ஜி.எஸ்.டி., சாலையிலேயே நிறுத்தி, பழுது பார்க்கின்றனர். அந்த வகையில், சாலையின் பெரும் பகுதியை அவர்கள் ஆக்கிரமித்து, தங்கள் சொந்த இடமாகவே மாற்றிவிட்டனர். மற்றொரு புறம், நடைபாதையையும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், தாம்பரம் முதல் மெப்ஸ் சிக்னல் வரை, வாகன நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.
அதேபோல், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதி, தாம்பரம் - வேளச்சேரி, தாம்பரம் - முடிச்சூர், காந்தி சாலைகளிலும் ஆக்கிரமிப்பு என்பது, கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துவிட்டது.
'கட்டிங்' கிடைத்து விடுவதால், நெடுஞ்சாலைத் துறையினர், போக்குவரத்து போலீசார், சட்டம் - ஒழுங்கு போலீசார், ஆக்கிரமிப்புகள் குறித்து கண்டுகொள்வதே இல்லை. இது தொடர்பாக, சமீபத்தில் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதேபோல், கிளாம்பாக்கத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, சாலையோரம், நடைபாதைகளை ஆக்கிரமிக்கப்படும் கடைகளை அகற்ற வேண்டும் என, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலை ஆக்கிரமிப்புகளை, போலீஸ் பாதுகாப்புடன், நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர்.
மேலும், இரும்புலியூரில் இருந்து குரோம்பேட்டை வரை, வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த கடைகளை, அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.