Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் தவம்

திருப்போரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் தவம்

திருப்போரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் தவம்

திருப்போரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் தவம்

ADDED : ஜூன் 27, 2025 10:44 PM


Google News
திருப்போரூர்,:திருப்போரூர் வட்டத்தில், வட்டார போக்குவரத்து பிரிவு அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில், 8 லட்சத்திற்கு மேல் இருசக்கர வாகனங்கள், 5 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் கனரக வாகனங்கள் உள்ளன.

திருப்போரூர் ஒன்றிய அளவில், 50 ஊராட்சிகள், வட்ட அளவில் 50க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள், 6 வருவாய் குறுவட்டங்கள் உள்ளன. ஒரு பேரூராட்சியும் உள்ளது.

மேலும், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நிலையில், 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்போரூர் தாலுகாவில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், தடையில்லா சான்று, கனரக வாகன உரிமத்திற்கு விண்ணப்பித்தல் என, பல்வேறு காரணங்களுக்காக, 35 கி.மீ.,க்கு அப்பால் உள்ள செங்கல்பட்டு அடுத்த பரனுாரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.

இதனால், பொதுமக்களுக்கு பெரும் போக்குவரத்து செலவு, கால விரயம், உடல் சோர்வு போன்றவை ஏற்படுகின்றன.

திருப்போரூர் தாலுகாவிலிருந்து பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம், 35 கி.மீ., தொலைவில் உள்ளதாலும், அதிகமான ஊர் எல்லைகள் உள்ளதாலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகின்றன.

மேலும், போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடந்து, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் ஒன்றியம் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒன்றியம். இங்கு 500க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. புதிய மனைப்பிரிவுகள் உருவாகி வருகின்றன.

எனவே, இங்குள்ள பொதுமக்களின் நலன் கருதியும், செங்கல்பட்டிலிருந்து பிரித்து திருப்போரூர் தாலுகாவில், உடனடியாக ஒரு யூனிட் அலுவலகமாக, புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திருப்போரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தி, சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினர்.

சமூக ஆர்வலர்களும், துறை சார்ந்த அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர்.

ஆனால், திருப்போரூர் தாலுகாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்காமல், செங்கல்பட்டிலிருந்து பிரித்து ஏற்கனவே திருக்கழுக்குன்றத்தில் செயல்படும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லையுடன் சேர்த்து செயல்பட, கடந்த இரண்டு மாதத்திற்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது.

செங்கல்பட்டை விட திருக்கழுக்குன்றம் துாரம் குறைவாக இருப்பதால் கால விரயம், வீண் அலைச்சல் சற்று குறைக்கப்படும் என்றாலும், இதை தற்காலிக தீர்வாகத் தான் மக்கள் கருதுகின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வாக, முக்கிய பகுதியான திருப்போரூர் தாலுகாவிலேயே, புதிதாக மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நகராட்சியாக்க கருத்துரு உள்ளது

திருப்போரூர் பகுதிவாசிகள் கூறியதாவது:செங்கல்பட்டு, பரனுாரிலிருந்து 15 கி.மீ., மட்டுமே உள்ள திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு யூனிட் அலுவலகமாக, மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், 35 கி.மீ., தொலைவிலுள்ள திருப்போரூர் தாலுகாவிற்கு மோட்டார் ஆய்வாளர் யூனிட் அலுவலகம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்போரூர் வளர்ச்சி நிலை அனைவருக்கும் தெரியும். திருப்போரூரை நகராட்சியாக தரம் உயர்த்தவும் கருத்துரு உள்ளது. திருப்போரூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us