/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சென்னை, புறநகரில் மின்சார பஸ் இயக்க 45 வழித்தடம்...தயார்:பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது சென்னை, புறநகரில் மின்சார பஸ் இயக்க 45 வழித்தடம்...தயார்:பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது
சென்னை, புறநகரில் மின்சார பஸ் இயக்க 45 வழித்தடம்...தயார்:பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது
சென்னை, புறநகரில் மின்சார பஸ் இயக்க 45 வழித்தடம்...தயார்:பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது
சென்னை, புறநகரில் மின்சார பஸ் இயக்க 45 வழித்தடம்...தயார்:பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது
ADDED : ஜூன் 27, 2025 10:49 PM

சென்னை:சென்னை, புறநகர் பகுதிகளில் மின்சார பேருந்துகள் இயக்க, 45 வழித்தடங்கள் தயாராக உள்ளன. இவற்றில், பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையமும் திறக்கப்பட்டு உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பயணியர் தேவையை போக்கும் வகையில், தனியார் பங்களிப்புடன் சென்னையில் 1,000 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக, 625 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 225 'ஏசி' பேருந்துகளும், 400 'ஏசி' இல்லாத பேருந்துகளும் இடம்பெற உள்ளன.
இதேபோல் சென்னை வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பல்லவன் இல்லம், பூந்தமல்லி பணிமனைகளில் 100.69 கோடி ரூபாயில், மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான,'சார்ஜிங்' கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது, 120 மின்சார பேருந்துகள் தயாராக உள்ளன.
இந்த புதிய பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின், வரும் 30ம் தேதி துவங்கி வைக்க உள்ளார்.
சென்னை புறநகரில் மின்சார பேருந்துகளை இயக்க, 45க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், மின்சார பேருந்து சேவை முதலில் துவக்கப்படுகிறது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
முதற்கட்டமாக, 625 மின்சார பேருந்துகளை இயக்க, அசோக் லேலண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 120 மின்சார பேருந்துகள், அனைத்து சோதனை ஓட்டமும் முடித்து, இயக்க தயாராக உள்ளன.
தற்போதுள்ள மாநகர சொகுசு, 'ஏசி' பேருந்துகளில் பயணிப்பது போல், பயணியர் இதிலும் பயணிக்கலாம். எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.
ஒப்பந்ததாரருக்கு கி.மீ., ஒன்றுக்கு, 'ஏசி' வசதி இல்லாத மின்சார பேருந்துகளுக்கு, 77.16 ரூபாய், 'ஏசி' பேருந்துகளுக்கு 80.86 ரூபாய் வழங்க, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மின்சார பேருந்துகளால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துக்கு டீசல் செலவும் குறையும். மின்சார பேருந்துகள் ஒரு முறை 'சார்ஜ்' செய்தால், சராசரியாக 180 கி.மீ., துாரம் இயக்க இயலும்.
ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் பெரும்பாலான மின்சார பேருந்துகள் இயக்கப்படும். பின்னர், தேவையை பொறுத்து, புதிய வழித்தடங்களில் மின்சார பேருந்துகள் இயக்க ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.