/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/தெலுங்கானா பெருமாள் கோவிலுக்கு மாமல்லையில் தயாராகும் மஹா ரதம்தெலுங்கானா பெருமாள் கோவிலுக்கு மாமல்லையில் தயாராகும் மஹா ரதம்
தெலுங்கானா பெருமாள் கோவிலுக்கு மாமல்லையில் தயாராகும் மஹா ரதம்
தெலுங்கானா பெருமாள் கோவிலுக்கு மாமல்லையில் தயாராகும் மஹா ரதம்
தெலுங்கானா பெருமாள் கோவிலுக்கு மாமல்லையில் தயாராகும் மஹா ரதம்
ADDED : பிப் 24, 2024 01:01 AM

மாமல்லபுரம்:ஆந்திர மாநிலம், திருப்பதியில் அருள்பாலிக்கும் வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலால், ஆந்திர மாநிலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவான நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் வெங்கடேச பெருமாளுக்கு கோவில் ஏற்படுத்த, யாதாத்ரி திருமலை தேவஸ்தானம் என்ற ஆன்மிக அமைப்பு முடிவெடுத்தது.
ஹைதராபாத் அருகில், புவனகிரி, மானேபள்ளி குன்று பகுதியில், பத்மாவதி, கோதாத்ரி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவிலை நிர்மாணித்துள்ளது.
இக்கோவிலின் திருத்தேர் உற்சவத்திற்காக, மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதி, மானசா சிற்பக்கூடத்தில், மஹாரதத் தேர், தேக்குமரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலுக்கு, கலையம்ச மரக்கதவுகள் உருவாக்கிய மரச்சிற்பக் கலைஞர் ஸ்தபதி ரமேஷ், இத்தேரை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று, தேரின் பீடம், துாண்கள், கலசம் என, தனித்தனியாக உருவாக்கப்பட்ட பாகங்களை ஒருங்கிணைத்து, மஹாரத தேராக உருவாக்கி, அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளதா, பாதையில் தேரோட்ட தன்மை, அதிர்வுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டன.
அரசு சிற்பக் கல்லுாரி மாணவர்கள், பயிற்சி முறையாக தேரை பார்வையிட்டு, அதன் ஆகமம், கலையம்சம், உருவாக்க முறைகள் குறித்து, ஸ்தபதியிடம் கேட்டறிந்தனர். பின், பாகங்களை தனித்தனியே பிரித்து, டிரெய்லர் வாகனத்தில் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, ஸ்தபதி ரமேஷ் கூறியதாவது:
மாமல்லபுரம் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், மரச்சிற்பக்கலை பட்டம் பெற்று, 25 ஆண்டுகளாக சிற்பக்கூடம் நடத்துகிறேன்.
தெலுங்கானா மாநிலத்தில் நிர்மாணிக்கப்படும் வெங்கடேச பெருமாள் கோவிலுக்காக, மஹா ரதத் தேர் உருவாக்க எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
குறைந்தபட்சம் 27 அடி உயர தேர், மஹா ரதம் என்றழைக்கப்படும். ஆகமத்தின்படி, வைணவ பெருமாளின் தேர் எண்கோண பட்டத்துடன் அமையும்.
இந்த தேரும், 27 அடி, 6 அங்குல உயரம், 16 அடி நீளம், 13 அடி அகலத்தில், ஆகம முறையில், தரமான தேக்கில் உருவாக்கியுள்ளோம். திராவிடக் கலையில் விமானம், இரண்டு அடுக்கு கொடுங்கைகள், பத்திரிப்பூ துாண் என்ற வடிவமைப்பில் அமைத்துள்ளோம்.
முன்புறம் தேரோட்டும் சாரதி பிரம்மா, நான்கு வேதங்களை குறிக்கும் நான்கு குதிரைகள் சிலைகள் உண்டு. எட்டு துாண்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நான்கு துவார பாலகர் சிற்பங்கள், மேற்புறம் நான்கு திசைகளுக்கும் தலா ஒரு கருடன் சிலையும் உண்டு.
பத்மம் எனப்படும் தாமரை மலர், வைணவ சமய சங்கு, சக்கரம், நாமம் உள்ளிட்ட சிற்ப அலங்காரமும் வடித்துள்ளோம். அடித்தள பகுதியை இரும்பில் அமைத்து, டயர் சக்கரம் பொருத்தியுள்ளோம்.
மொத்தம் 17 டன் மரத்தில், தேவையற்றதை கழித்து, 600 கன அடியில், 13 டன் எடையில் இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் பணியை துவக்கி, தற்போது தான் முடித்தோம்.
மஹா ரதத் தேரை, கோவில் வளாகத்தில் உருவாக்கவே பொதுவாக அனுமதிப்பர். முதல் முறையாக, மாமல்லபுரம் கூடத்தில் உருவாக்கி, அங்கு அனுப்பப்படுகிறது. அடுத்த மார்ச் மாதம் 6ம் தேதி, கோவிலில் பிராண பிரதிஷ்டையும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.