Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குண்டூர் ஏரி துார்வாரும் பணிகள் இழுபறி: 3 ஆண்டாக மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

குண்டூர் ஏரி துார்வாரும் பணிகள் இழுபறி: 3 ஆண்டாக மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

குண்டூர் ஏரி துார்வாரும் பணிகள் இழுபறி: 3 ஆண்டாக மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

குண்டூர் ஏரி துார்வாரும் பணிகள் இழுபறி: 3 ஆண்டாக மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

ADDED : செப் 11, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு குண்டூர் ஏரி சீரமைப்பு பணிக்கு, 'அம்ரூத்' திட்ட நிதி மற்றும் சமூக பொறுப்பு நிதி என, இருமுறை நிதி ஒதுக்கியும், ஏரி முறையாக துார்வாரப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில், 42 ஏக்கர் பரப்பளவில், குண்டூர் ஏரி அமைந்துள்ளது. நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீர், பல ஆண்டுகளுக்கு முன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்பட்டது.

தற்போது, குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், நிலத்தடி நீராதாரமாக உள்ளது. தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக, இந்த ஏரியில் இருந்து, 5 ஏக்கர் நிலம் 1987ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதன் பின், பி.எஸ்.என்,எல்., நிர்வாகம் 2.5 ஏக்கர் இடத்தை விலைக்கு வாங்கி, அலுவலகம் கட்டியது. இதுமட்டுமின்றி, ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து, பலர் வீடுகள் கட்டியுள்ளனர்.

தற்போது, ஏரியின் பரப்பளவு, 29 ஏக்கராக குறைந்துள்ளது. ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள மூன்று மலைகளிலிருந்தும், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர் பகுதிகளிலிருந்தும், ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.

அருகிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த ஏரியில் கலக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் கரையை உடைத்து, தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.

இதனால், ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாமல், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏரியை துார் வாரி ஆழப்படுத்தவும், நடைபாதை அமைக்கவும், நீர் வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, குண்டூர் ஏரியை துார்வாரி சீரமைக்க நிதி கேட்டு, நீர்வளத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளதால், துார்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியது.

நீர்வளத்துறையின் அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு திட்டமான 'அம்ரூத்' திட்டத்தில், 2022-23ம் ஆண்டு, 2.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தில், ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்துதல், நடைபாதை, மின் விளக்குகள் மற்றும் அலங்கார செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, 2023 மே மாதம் பணிகள் துவங்கின. ஏரிக்கரை மற்றும் நடைபாதை அமைத்தல், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

இதில், ஏரியை முழுமையாக துார்வாரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையில், தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதி 25.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மீண்டும் ஏரியில் துார்வாரும் பணியை, கடந்த ஜூன் மாதம், அப்போதைய கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.

ஆனால், துார்வாரும் பணி முழுமை பெறாமல் உள்ளது.

ஏரியில் நடைபெறும் பணிகள் குறித்த தகவல் பலகையும் வைக்கப்படவில்லை. இதனால், இப்பணியில், அரசு பணம் முறையாக செலிவிடப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் துார்வாரும் பணிகள் குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் குழு அமைத்து, கலெக்டர் சினேகா விசாரணை நடத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 6ம் தேதி, ஏரியில் நடைபெறும் பணிகளை, நகராட்சிகளின் இயக்குநர் மதுசூதன ரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், ஏரியை துார்வாரும் பணிகளை, இம்மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பணிகளில் குளறுபடி


குண்டூர் ஏரியை துார்வாரி சீரமைக்கும் பணி, மூன்று ஆண்டுகளாக மந்தமாக நடைபெற்று வருகிறது. அம்ரூத் திட்டத்தில் ஏரி துார்வரப்பட்டது. ஆனால், சமூக பொறுப்பு நிதியின் கீழ், மீண்டும் ஏரியை துார்வாரும் பணிகள் துவங்கி, ஏரியின் மையப்பகுதியில், மண் திட்டுகள் அமைத்து உள்ளனர். ஏரியை துார் வாரியிருந்தால், மண்ணை வெளியில் கொண்டுவந்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. இதனால், ஏரியில் பெயரளவிற்கு துார்வாரப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us