Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பைக் பந்தயத்தில் பாட்டி, குழந்தை பலி...மீண்டும் விபரீதம்!:ஆட்டோ ரேஸ் சம்பவத்தில் 7 பேர் கைது

பைக் பந்தயத்தில் பாட்டி, குழந்தை பலி...மீண்டும் விபரீதம்!:ஆட்டோ ரேஸ் சம்பவத்தில் 7 பேர் கைது

பைக் பந்தயத்தில் பாட்டி, குழந்தை பலி...மீண்டும் விபரீதம்!:ஆட்டோ ரேஸ் சம்பவத்தில் 7 பேர் கைது

பைக் பந்தயத்தில் பாட்டி, குழந்தை பலி...மீண்டும் விபரீதம்!:ஆட்டோ ரேஸ் சம்பவத்தில் 7 பேர் கைது

ADDED : ஜூன் 20, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
பூந்தமல்லி:வண்டலுார் - மீஞ்சூரில் நடந்த ஆட்டோ ரேஸில் இருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ரேஸ் விபரீதம் அரங்கேறி உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்த பைக் ரேஸில், வாலிபர்களின் அட்டூழியத்தால் பாட்டி, பேத்தி பரிதாபமாக பலியாகினர்.

இதற்கிடையே, கடந்த 15ம் தேதி இரவு நடந்த வண்டலுார் ஆட்டோ ரேஸில், இரண்டு பேர் பலியான விவகாரத்தில் ஏழு பேரை கைது செய்த போலீசார், 30 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை, புறநகர் பகுதிகளில், பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பணம் வைத்து நடக்கும் இவ்வகை ரேஸ்களால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

பந்தயம்


சென்னை, வண்டலுார் --- மீஞ்சூர் சாலையில், கடந்த 15ம் தேதி அதிகாலை 4:40 மணிக்கு, இரண்டு ஆட்டோக்களுக்கு இடையே பந்தயம் நடந்தது. அதில் வெற்றி பெறுவோருக்கு பணம் பரிசாக வழங்கப்படுவதோடு, யார் வெற்றி பெறுவர் என, பந்தயம் கட்டி பணம் சம்பாதிப்போரும் குழுமினர்.

பந்தயத்தில் பங்கேற்போரை உற்சாகப்படுத்தும் வகையில், ஆட்டோ ரேஸின் போது இரண்டு கார், 10 ஆட்டோ, 20 இரு சக்கர வாகனங்களில், பந்தயத்தை நடத்துவோரும் அதிவேகத்தில் சென்றனர்.

அப்போது, சோழவரம் அருகே, சிறுணியம் மேம்பாலம் மீது, அந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், அம்பத்துாரைச் சேர்ந்த ஷியாம்சுந்தர், 24, குன்றத்துாரைச் சேர்ந்த மணிகண்டன், 22, ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

அவர்களுடன் பயணித்த மோகனகிருஷ்ணன், 30, மாரிமுத்து, 32, சுபேர், 20, ஆகியோர் படுகாயமடைந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இச்சம்பவம் நடந்த கூட தெரியாத போலீசார், செய்தி வெளியாகி, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்த பிறகே சுதாரித்து, நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆவடி கமிஷனரகம் உத்தரவின்படி, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், பந்தயத்தில் பங்கேற்றமுகப்பேர் கிழக்கைச் சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் 'கருடன்' சந்துரு, 38, ஜாய்சன், 31, மற்றொரு ஆட்டோ மெக்கானிக் பெரம்பூர் மதி, 43, அவருடன் சென்ற ரமேஷ், 32, ராஜசேகர், 35, அண்ணா நகர் பிரேம்குமார், 33, கவுதமன், 24, ஆகிய ஏழு பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ரேஸிற்கு பயன்படுத்திய இரு ஆட்டோக்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், பந்தயத்தில் உடன் சென்ற கார்களின் ஓட்டுனர்கள், இருசக்கர வாகனம் ஓட்டியோர் என 30 பேரை, தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த மற்றொரு பைக் ரேஸ் சம்பவத்தில் பாட்டி, பேத்தி ஆகிய இருவர் உயிரிழந்திருப்பது, பலதரப்பினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்தவர் ரேவதி, 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்த ரேவதி, ஒன்றரை வயது பெண் குழந்தை நிகாஸ்ரீயுடன், அதே பகுதியில் வசிக்கும் தாய் அன்பரசி, 49, வீட்டில் வசித்து வந்தார்.

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் நிகாஸ்ரீக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் மாலை, பாட்டி அன்பரசி அழைத்துச் சென்றார்.

இவர்களது உறவினர் தண்டபாணி என்பவர், இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். பாட்டியும், பேத்தியும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

பூந்தமல்லி அடுத்த திருமழிசை 'சிப்காட்' அருகே சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக மற்றொரு இருசக்கர வாகனம், தண்டபாணி ஓட்டிய வாகனத்தின் மீது மோதியது.

இதில், மூவரும் தடுமாறி சாலை நடுவே விழுந்தனர். விபத்துக்கு காரணமான மற்றொரு வாகன ஓட்டி, கீழே விழாமல் லாவகமாக வாகனத்தை ஓட்டி, அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தார். அவர் பின்னே, மற்றொரு இருசக்கர வாகனமும் அதிவேகத்தில் விரைந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி அன்பரசி, பேத்தி நிகாஸ்ரீ ஆகியோரை, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, அருகில் உள்ள தண்டலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தண்டபாணி லேசான காயத்துடன் தப்பினார்.

ஆபத்துக்கு வழி


நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாட்டியும், பேத்தியும் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்குள்ளான பகுதிகளில் இருந்து 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றினர்.

அதில், ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேக ரேஸில் ஈடுபட்டது தெரியவந்தது.

குறிப்பாக, தண்டபாணி ஓட்டிய வாகனம் மீது மோதி நிற்காமல் சென்ற வாகனமும் அடையாளம் தெரிந்தது. இதையடுத்து, ரேஸில் ஈடுபட்ட மர்ம கும்பலை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

'சென்னை மற்றும் புறநகரில் பொதுமக்கள், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ரேஸ் நடத்தப்படுவது, மிக பெரிய அளவில் ஆபத்திற்கு வழிவகுக்கும். அதற்கு முன், போலீசார் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ரேஸ் நடத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us