/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் கழிவுநீர் கொட்டும் தனியார் டேங்கர் லாரிகள் கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாலையில் கழிவுநீர் கொட்டும் தனியார் டேங்கர் லாரிகள் கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சாலையில் கழிவுநீர் கொட்டும் தனியார் டேங்கர் லாரிகள் கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சாலையில் கழிவுநீர் கொட்டும் தனியார் டேங்கர் லாரிகள் கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சாலையில் கழிவுநீர் கொட்டும் தனியார் டேங்கர் லாரிகள் கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ADDED : ஜூன் 20, 2024 12:15 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 20,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நகராட்சியில், ஆறு வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் தயாரிக்கப்பட்டு துவக்க நிலையில் உள்ளது.
இதன் காரணமாக, தொழிற்சாலை, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீர், தனியார் டேங்கர் லாரிகளால் கொண்டுவரப்பட்டு, மறைமலை நகர் சிப்காட் டான்சி பகுதியில் முத்துராமலிங்கத்தேவர் சாலை ஓரம் உள்ள காலி நிலத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
இதில், கழிவுநீருடன் தொழிற்சாலைகள் ரசாயனம் கலந்த கழிவுநீர் கொட்டப்பட்டு வருவதால், இந்த பகுதியில் இருந்த அனைத்து மரங்களும் காய்ந்து கருகி விட்டன.
துர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு நடந்து செல்லும் பெண்கள் கடும் அவதியடைகின்றனர்.
இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் கொண்டு வந்து, இங்கே கொட்டப்பட்டு வருகிறது.
மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மறைமலை நகரில் உள்ள போதிலும், மறைமலை நகர் சிப்காட் பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் எந்த அளவில் பின்பற்றப்படுகின்றன என, அவர்கள் கண்காணிப்பது இல்லை.
நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பல ஆண்டுகளாக கழிவுநீர் பிரச்னை இந்த பகுதியில் தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, நோய்த்தொற்று அபாயம் ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் ஊற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மறைமலை நகர் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கழிவுநீரை அகற்றும் டேங்கர் லாரிகளுக்கு, நகராட்சி வாயிலாக தனியாக உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. திறந்த வெளியில் கழிவுநீர் ஊற்றும் வாகனங்களுக்கு, முதல் முறை 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இரண்டாம் முறை கொட்டினால் 50,000 ரூபாய் அபராதமும், தொடர்ந்து அதே வாகனம் பிடிபட்டால், வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, செங்கல்பட்டு - பழவேலி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், டேங்கர் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, செங்கல்பட்டு நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இங்கு, ஒரு நாளைக்கு 40,000 லிட்டர் கழிவுநீர் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்ய முடியும். மேலும், மறைமலை நகர் அடிகளார் சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில், புதிதாக சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில், ஒரு டேங்கர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுவதாலும், நிலையம் செங்கல்பட்டில் உள்ளதால் சுங்கக்கட்டணத்தை தவிர்க்கவுமே, தனியார் டேங்கர் லாரிகள் சாலையோரம் கழிவுநீரை கொட்டிச் செல்வதாக கூறப்படுகிறது.