/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பராமரிப்பு தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பராமரிப்பு தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பராமரிப்பு தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பராமரிப்பு தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து
கிளாம்பாக்கம் நீரூற்று பூங்கா பராமரிப்பு தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து
ADDED : செப் 14, 2025 11:26 PM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு நீரூற்று பூங்காவில், பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாத தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் பத்து தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. தற்போது வேறு ஒரு நிர்வாகத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில், ஆசியாவின் பெரிய பேருந்து முனையம் இயங்கி வருகிறது.
இந்த பேருந்து முனையத்தின் அருகே, இடது மற்றும் வலது பக்கத்தில், ஜி.எஸ்.டி., சாலையில், கலைஞர் நுாற்றாண்டு நீரூற்று பூங்கா மற்றும் கலைஞர் நுாற்றாண்டு கால நிலை பூங்கா என, இரு பூங்காக்கள் உள்ளன.
இதில், இடது பக்கம் உள்ள நீரூற்று பூங்கா 6 ஏக்கர் பரப்பில், 14 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு, கடந்த 2023, டிச. 30ல், பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று வகை நடை பாதைகள், சதுரங்க சிற்பம், மரப்பாலம் ஆகியவை பொது மக்களை மிகவும் கவர்ந்தன.
தவிர, சிற்ப நீரூற்று, உலர் தள நீரூற்று, ஆறு அடுக்கு கல் நீரூற்று, நடன நீரூற்று ஆகிய நான்கு வகை நீரூற்றுகள் குழந்தைகளை மிகவும் மகிழ்வித்தன.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நான்கு வகையான நீரூற்றுகளும் செயல்படவில்லை. இதனால், பூங்காவிற்கு வந்த பெற்றோர்களும், குழந்தைகளும் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன. இருப்பினும் பூங்காவை பராமரித்து வந்த தனியார் நிறுவனம், கடந்த மாதம் வரை, நீரூற்றுகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், பூங்காவை பராமரித்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் 10 நாட்களுக்கு முன் ரத்து செய்தது.
சி.எம்.டி.ஏ., நிர்வாகத்தினர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் கலைஞர் நுாற்றாண்டு நீரூற்று பூங்காவின் பராமரிப்பு பணிகளை, தனியார் கல்லுாரி வசம் ஒப்படைத்துள்ளோம்.
அக்கல்லுாரி நிர்வாகத்தினர், சமூக பொறுப்பு நிதி வாயிலாக, இன்று பூங்காவின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.