Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மூன்று மேம்பால பணியிடங்களில் மாற்றுவழி அமைக்க...வலுக்கும் புகார்; தினமும் நெரிசலில் திணறுவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

மூன்று மேம்பால பணியிடங்களில் மாற்றுவழி அமைக்க...வலுக்கும் புகார்; தினமும் நெரிசலில் திணறுவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

மூன்று மேம்பால பணியிடங்களில் மாற்றுவழி அமைக்க...வலுக்கும் புகார்; தினமும் நெரிசலில் திணறுவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

மூன்று மேம்பால பணியிடங்களில் மாற்றுவழி அமைக்க...வலுக்கும் புகார்; தினமும் நெரிசலில் திணறுவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

ADDED : ஜூன் 16, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையே, தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக மூன்று மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களில், கூடுதல் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, தமிழக போக்குவரத்து துறை வலியுறுத்தி உள்ளது. மாற்று வழி அமைக்காததால், தினமும் நெரிசலில் திணறுவதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

சென்னையின் நுழைவு வாயிலாக செங்கல்பட்டு மாவட்டத்தின், மேல்மருவத்துார் முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலை உள்ளது. இந்த சாலையில் சீரமைப்பு, பராமரித்தல் பணிகளை மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை கையாண்டு வருகிறது.

விழாக்காலங்கள், முகூர்த்த தினங்கள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை, 10 மடங்கு அதிகரிக்கிறது.

இதனால், மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையிலான ஜி.எஸ்.டி., சாலையில், வார நாட்களில் சுமாரான போக்குவரத்து நெரிசலும், விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் நிலவி வருகிறது.

முக்கியமாக, கருங்குழி, படாளம், புக்கத்துறை ஆகிய இடங்களின் சுற்றுப் பகுதியிலிருந்து, ஏராளமான வாகனங்கள் ஜி.எஸ்.டி., சாலைக்குள் நுழைவதால், அந்த இடங்களில், நத்தை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து, தமிழக நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்த நிலையில், கருங்குழி, படாளம் மற்றும் புக்கத்துறை ஆகிய இடங்களில், மேம்பாலங்கள் கட்ட, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அணுகு சாலை


இதையடுத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், மேற்கண்ட மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.

ஆனால், மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. தவிர, கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல, அணுகு சாலை தவிர, மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை.

அணுகு சாலை போதிய அகலத்தில் இல்லை. இதனால், அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் கடும் நெரிசலில் சிக்கி, தினமும், மணிக்கணக்கில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

உளுந்துார்பேட்டை - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான 40 கி.மீ., சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 2,000 வாகனங்கள் பயணித்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, வாகனங்கள் எண்ணிக்கை 3,000 என, அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், கருங்குழி, படாளம், புக்கத்துறை ஆகிய இடங்களில், சுற்றுப்பகுதி வாகனங்கள் மிகுதியாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் இணைவதால், மூன்று இடங்களிலும் அனைத்து நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீர்வாக, மூன்று இடங்களிலும் மேம்பாலங்கள் கட்ட திட்டம் வகுக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டன.

நடவடிக்கை


மேம்பால பணிகள் நடைபெறும் மூன்று இடங்களிலும் வாகனங்கள் செல்லும்படி, தலா 1 கி.மீ., துாரம் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில், 50 அடி அகலமுள்ள வழித்தடத்தில், பயணித்த ஒட்டுமொத்த வாகனங்களும், ஒரே நேரத்தில், அணுகு சாலைக்குள் நுழைவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த அணுகு சாலைகள் அகலம் குறைவாக, அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரே நேரத்தில் ஒரு பெரிய வாகனம் செல்லும் வகையில்தான் அணுகு சாலையின் அகலம் உள்ளது. எனவே, கனரக வாகனம் செல்லும்போது, அதன் பின்னால் தான் மற்ற வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், பேருந்துகள், கார்கள், லாரிகள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கின்றன. மேம்பால பணிகள் நடக்கும் மூன்று இடங்களிலும் இதே நிலை உள்ளதால், இவற்றைக் கடந்து, அரசு பேருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு, தினமும் ஒரு மணி நேரம் வரை தாமதமாகிறது.

எனவே, மேம்பாலம் கட்டப்படும் இடங்களில் உள்ள அணுகு சாலைகளை விரிவாக்கம் செய்யவும், அங்கு காவலர்களை நியமித்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us