/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புதிதாக உதயமாகுமா அச்சிறுபாக்கம் தாலுகா? எதிர்பார்ப்பு! சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு புதிதாக உதயமாகுமா அச்சிறுபாக்கம் தாலுகா? எதிர்பார்ப்பு! சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு
புதிதாக உதயமாகுமா அச்சிறுபாக்கம் தாலுகா? எதிர்பார்ப்பு! சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு
புதிதாக உதயமாகுமா அச்சிறுபாக்கம் தாலுகா? எதிர்பார்ப்பு! சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு
புதிதாக உதயமாகுமா அச்சிறுபாக்கம் தாலுகா? எதிர்பார்ப்பு! சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:11 AM

செங்கல்பட்டு : அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா ஏற்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பி, கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்டத்தொடரில், அச்சிறுபாக்கம் தாலுகா அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்த்துள்ளனர்.
செங்கல்பட்டு தாலுகாவில் இருந்து, 1975ம் ஆண்டு மதுராந்தகத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த தாலுகாவில், ஒன்பது குறுவட்டங்களில், 196 வருவாய் கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், சித்தாமூர், சூணாம்பேடு, செய்யூர், அணைக்கட்டு ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், படாளம் காவல் நிலையம் ஆகியவை உள்ளன.
மதுராந்தகம் நகராட்சி, அச்சிறுபாக்கம், கருங்குழி பேரூராட்சிகள், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மதுராந்தகம் தாலுகாவில் இருந்து, 1986ம் ஆண்டு, செய்யூர் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு, செய்யூர் தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த தாலுகாவில், ஏழு குறுவட்டங்களில், 127 வருவாய் கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், சூணாம்பேடு, சித்தாமூர், செய்யூர், அணைக்கட்டு, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், கூவத்துார் காவல் நிலையம் உள்ளன.
இந்த தாலுகாக்களில், மக்கள் தொகை அதிகரித்து வருவதால், புதிய தாலுகா பிரிக்க வேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, 50 கி.மீ., தொலைவில் உள்ள அனந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோன்று, மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், 25 கி.மீ., துாரம் உள்ள செய்யூர் தாலுகா அலுவலகத்திற்கு, பல்வேறு தேவைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், காலவிரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது.
இதனால், அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, அரசிடம் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களை பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
இதில், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், 46 ஊராட்சிகள் மற்றும் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், 31 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.
அச்சிறுபாக்கம் மண்டலத்தில், அச்சிறுப்பாக்கம் குறுவட்டத்தில் 24 கிராமங்கள், ஒரத்தி குறுவட்டத்தில் 23 கிராமங்கள், பெரும்பாக்கம் குறுவட்டத்தில் 25 கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன.
சித்தாமூர் மண்டலத்தில், சித்தாமூர் குறுவட்டத்தில் 27 கிராமங்கள், கயப்பாக்கம் குறுவட்டத்தில் 18 கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன.
அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா ஏற்படுத்த, 2022ம் ஆண்டு, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்காமல், மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, வரும் சட்டசபை கூட்ட தொடரில், அச்சிறுபாக்கம் புதிய தாலுகா அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.