/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரயில் நிலையம் செல்ல பாதை எங்கே? கூடுவாஞ்சேரி பயணியர் பரிதவிப்பு! ரயில் நிலையம் செல்ல பாதை எங்கே? கூடுவாஞ்சேரி பயணியர் பரிதவிப்பு!
ரயில் நிலையம் செல்ல பாதை எங்கே? கூடுவாஞ்சேரி பயணியர் பரிதவிப்பு!
ரயில் நிலையம் செல்ல பாதை எங்கே? கூடுவாஞ்சேரி பயணியர் பரிதவிப்பு!
ரயில் நிலையம் செல்ல பாதை எங்கே? கூடுவாஞ்சேரி பயணியர் பரிதவிப்பு!
ADDED : ஜூன் 16, 2024 12:28 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையத்திற்குதினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.
தற்போது, இந்த ரயில் நிலையத்தில், மத்திய அரசின் திட்ட பணிகள் துவங்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், இருசக்கர வாகன நிறுத்தம், நவீன வசதிகளுடன் கூடிய கார் நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையத்திற்கு, லால் பகதுார் சாஸ்திரி தெரு வழியாக, டிக்கெட் கவுண்டர் செல்வதற்கும், மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில் அருகில் முதலாவது நடைமேடைக்கு செல்வதற்கும் பாதைகள் உள்ளன.
ராஜாஜி தெரு, ரயில்வே மேம்பாலம் அருகில் முதலாவது நடைமேடை செல்வதற்கும், ஒரு பாதை உள்ளது. தற்போது, இந்த மூன்று இடங்களிலும் நடக்கும் கட்டுமானப் பணிகளால், பயணியர் ரயில் நிலையம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர், டிக்கெட் கவுன்டருக்கு செல்ல, ரயில் நிலையத்தையே சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அங்கு நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, ரயில் நிலையத்தின் வெளியேயும், சுற்றுப்பகுதியிலும் மின் விளக்குகள் எரியவில்லை.
அதனால், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள், ரயில் நிலையத்தில் இறங்கி, முதலாவது நடைமேடை வழியாக வெளியே வந்து, மீண்டும் நடைமேடையின் கடைசிப் பகுதிக்கு சென்று, வெளிச்சம் இல்லாத பாதையில் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கூடுவாஞ்சேரி ரயில் பயணியருக்காக, தற்காலிக பாதை வசதிகளையும், மின் விளக்கு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.