Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி எப்போது முடியும்? கலெக்டரிடம் விவசாயிகள் குமுறல்!

மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி எப்போது முடியும்? கலெக்டரிடம் விவசாயிகள் குமுறல்!

மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி எப்போது முடியும்? கலெக்டரிடம் விவசாயிகள் குமுறல்!

மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி எப்போது முடியும்? கலெக்டரிடம் விவசாயிகள் குமுறல்!

ADDED : ஜூன் 22, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தமாக நடந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மற்றும் மதுராந்தகம் நகர மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். பணியை விரைந்து முடித்து, ஏரியில் தண்ணீர் தேக்க வேண்டும்.

ஏரிகளில் வண்டல் மண் எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி அளித்தால், ஏரிகள் ஆழமாகும். ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும்.

விவசாய நிலங்களில், பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இப்பகுதிகளை வனத்துறை, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

ஆனால், இழப்பீடு பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர்கள், சிட்டா, அடங்கல் வழங்க மறுக்கின்றனர். சான்றிதழ்கள் வழங்கி, நிவாரணம் வழங்க வேண்டும்.

திருக்கழுக்குன்றம் பகுதியில், காற்றுடன் மழை பெய்ததில், மின் கம்பங்கள் சாய்ந்து கம்பிகள் கீழே விழுந்துள்ளன. சீரமைக்க விவசாயிகள் புகார் தெரிவித்தால், மின் வாரிய ஊழியர்கள் வருவதில்லை.

பாலாற்றில், திம்மாவரம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். வில்லியம்பாக்கம் ஊராட்சியில் நெற்களம் அமைக்க வேண்டும்.

தாம்பரம் அடுத்த கவுரிவாக்கம் ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுத்து, துார்வாரி சீரமைக்க, 19 முறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும்.

பவுஞ்சூரில் வேளாண்மைத் துறை பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டக்கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்டடம் வந்தபாடில்லை.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மூன்று விவசாயிகளுக்கு, பராம்பரிய நெல் விதைகளை வழங்கி, இதற்கு பதிலளித்த கலெக்டர் அருண்ராஜ் கூறியதாவது:

மதுராந்தகம் ஏரி பணியை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். மின்வாரிய புகார்கள் மீது, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவுஞ்சூரில் வேளாண்மைத்துறை அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us