Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போலீஸ் பாதுகாப்புடன் சென்ற கந்தசுவாமி நடனமாடி வரவேற்ற கிராமத்தினர்

போலீஸ் பாதுகாப்புடன் சென்ற கந்தசுவாமி நடனமாடி வரவேற்ற கிராமத்தினர்

போலீஸ் பாதுகாப்புடன் சென்ற கந்தசுவாமி நடனமாடி வரவேற்ற கிராமத்தினர்

போலீஸ் பாதுகாப்புடன் சென்ற கந்தசுவாமி நடனமாடி வரவேற்ற கிராமத்தினர்

ADDED : மார் 11, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுவாமி உற்சவர் தேர் வீதி உலா பரிவேட்டை நடத்துவதற்காக ஆலத்துார், தண்டலம் கிராமங்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்த கிராமங்களுக்குச் சென்று விட்டு திரும்பும் போது, திருப்போரூரில் உள்ள 15வது வார்டு, படவேட்டம்மன் கோவில் தெரு, ஆதிதிராவிடர் பகுதிக்கு சுவாமி வந்து செல்ல வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்காக அப்போது அப்பகுதி 15வது வார்டு கவுன்சிலர் பாரதி, ஹிந்து அறநிலையத் துறை, அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தார்.

பின் மக்களுடன் இணைந்து கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுவாமி செல்ல வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு முதல் முறையாக அப்பகுதிக்கு சுவாமி உற்சவர் ஊர்வலம் சென்றது. தொடர்ந்து 2024ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் சென்றது. அப்போது சில சலசலப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், 8ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் பரிவேட்டை உற்சவத்திற்கு, ஆலத்துார் கிராமத்துக்குச் சென்று மறுநாள் தண்டலம், மேட்டுதண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உற்சவர் தேர் சென்றது.

பின், நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாவது ஆண்டாக, திருப்போரூர் படவேட்டம்மன் கோவில் தெருவிற்கு தேர் உற்சவம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருகை தந்தது.

கந்த பெருமான் தேர் உற்சவத்தை அப்பகுதி மக்கள் மலர் துாவியும், பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

108 தேங்காய் உடைத்து சுவாமியை வரவேற்றனர். பின்னர் மக்கள் தாய் வீட்டு சீர்வரிசை, பிரமாண்ட மாலை அணிவித்து கந்த பெருமானை வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us