Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வனப்பகுதியில் 'சிசிடிவி' கேமராவுடன் 835 சூரிய ஒளி விளக்கு பொருத்த முடிவு விலங்குகள் -- மனித மோதல்களை தடுக்க நடவடிக்கை

வனப்பகுதியில் 'சிசிடிவி' கேமராவுடன் 835 சூரிய ஒளி விளக்கு பொருத்த முடிவு விலங்குகள் -- மனித மோதல்களை தடுக்க நடவடிக்கை

வனப்பகுதியில் 'சிசிடிவி' கேமராவுடன் 835 சூரிய ஒளி விளக்கு பொருத்த முடிவு விலங்குகள் -- மனித மோதல்களை தடுக்க நடவடிக்கை

வனப்பகுதியில் 'சிசிடிவி' கேமராவுடன் 835 சூரிய ஒளி விளக்கு பொருத்த முடிவு விலங்குகள் -- மனித மோதல்களை தடுக்க நடவடிக்கை

ADDED : ஜூலை 31, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் வனச்சரக அலுவலகத்தின் கீழ், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் தாலுகாக்களில், 4,872 ஹெக்டேர் நிலப்பரப்பில், இலையுதிர் காப்பு காடுகள் உள்ளன. சமூக காடுகள் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன.

கோழியாளம், தீட்டாளம், பெருங்கோழி, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, தோட்டச்சேரி, கொளத்தனுார், எடமச்சி, ராமாபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், இந்த காப்புக் காடுகள் உள்ளன.

இக்காடுகளில், 2,000க்கும் அதிகமான மான்கள், 1,000க்கும்அதிகமான மயில்கள், காட்டுப்பன்றி, முயல், நரி, குள்ளநரி, உடும்பு, குரங்கு உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

தவிப்பு


காப்புக் காடுகளை ஒட்டியுள்ள விவசாய விளை நிலங்களில், நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து, மரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, பருத்தி, தர்பூசணி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

தண்ணீர், உணவுத் தேவைக்காக, காப்புக் காடுகளில் இருந்து வெளியேறும் மான்கள், காட்டுப்பன்றிகள் போன்றவை, பயிர்களை நாசம் செய்கின்றன.

அதனால், பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனைத் தவிர்க்கும் விதமாக, விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க, விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இரவு நேரங்களில் பயிர்களை காப்பதற்காக கண் விழிப்பதால், மற்ற கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

மான், காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக, மின் இணைப்பு ஏற்படுத்தி, பயிர்களை சுற்றி மின்வேலி அமைப்பதனால், வேட்டைக்குச் செல்லும் மனிதர்கள் சிக்கி, சில நேரங்களில் மனித உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு, வனவிலங்குகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழிக்கும் பிரச்னை, நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஒப்பந்தம்


இதற்கு, வனத்துறை போதிய இழப்பீட்டினை, உடனடியாக வழங்குவதில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வன விலங்குகள் விளை பயிர்கள் சேதம் குறித்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், சமூக அமைப்புகளிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன. மேலும், வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ், உள்ளாட்சி அமைப்பினர், வேளாண் துறை உள்ளடக்கிய, விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், தமிழக அரசு சார்பாக, மனிதன் - விலங்கு மோதலை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ், சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகளை நிறுவ, ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மதுராந்தகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட 835 பகுதிகளில், 'சிசிடிவி' கேமராக்களுடன் சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகள் அமைக்க, மின் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு - மனிதர்கள் மோதல் தடுப்பு பணிக்காக, மதுராந்தகம் இலையுதிர் காப்புக் காடுகளில், 835 இடங்களில், கண்காணிப்பு கேமராக்களுடன் சோலார் விளக்குகள் பொருத்துவதற்கான 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிந்தவுடன், இத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

- வனச்சரக அலுவலர்,

மதுராந்தகம்.

எந்த பலனும் இல்லை

காப்புக்காடுகளில் 'சிசிடிவி' கேமராக்களுடன், சோலார் மின்விளக்குகள் பொருத்தும் திட்டம் குறித்து, செங்கை விவசாயிகள் நலச்சங்க தலைவர் பெருக்கரணை வெங்கடேசன் கூறியதாவது:சோலார் விளக்குகள் அமைப்பதன் வாயிலாக, 'டெண்டர்' எடுக்கும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் லாபம் அடையலாம். இதுபோன்ற திட்டங்களால், விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை.காட்டு விலங்குகளால், விவசாய பயிர்கள் சேதம் அடைந்த உடனே, வனத்துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்.காப்புக்காடுகளை ஒட்டி உள்ள விளை நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில், அகழிகள் ஏற்படுத்துவதன் வாயிலாக, காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க முடியும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us