Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இ.சி.ஆர்., விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைந்து பாதிப்பு

இ.சி.ஆர்., விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைந்து பாதிப்பு

இ.சி.ஆர்., விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைந்து பாதிப்பு

இ.சி.ஆர்., விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைந்து பாதிப்பு

ADDED : ஜூன் 12, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
செய்யூர்:மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, மாமல்லபுரம் -- முகையூர், மற்றும் முகையூர் -- மரக்காணம் இடையே திட்டத்தை செயல்படுத்துகிறது.

இச்சாலை விரிவாக்கத் திட்ட பணிகளுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் பகுதியில், தற்போது சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.

முதலியார்குப்பம் அரசமரத்தடி விநாயகர் கோவில் அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறு உள்ளது.

இதன் வாயிலாக, ஓதியூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம் ஆகிய மூன்று கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை, சாலை விரிவாக்கப் பணியின் போது, ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த தண்ணீர் குழாய் உடைந்து சேதமடைந்தது.

இதனால், நேற்று ஓதியூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம் ஆகிய மூன்று கிராம மக்களுக்கும், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஆழ்துளைக் கிணறு உள்ள பகுதியில், புதிய கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளதால், மாற்று இடத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணியின் போது, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு செல்லும் தண்ணீர் குழாய் சேதமடைந்தது. இதுகுறித்து, சாலை ஒப்பந்த பணியாளர்களிடம் பொது மக்கள் கேட்டபோது, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து தர முடியாது என தெரிவித்தனர். பின், பேரூராட்சி சார்பாக பேச்சு நடத்தப்பட்டதை அடுத்து, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து தர ஒப்புக்கொண்டனர். விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.

-ர.விஜயா,

3வது வார்டு கவுன்சிலர், இடைக்கழிநாடு பேரூராட்சி.

சாலை விரிவாக்கப் பணியின் போது, தவறுதலாக ஆழ்துளைக் கிணற்றின் குழாய் சேதமடைந்து விட்டது. பேரூராட்சி நிர்வாகம் சார்பாக, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து தர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும்.

- ஒப்பந்த அதிகாரி,

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us