/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆனுார் கோவில் திருப்பணிகள் முடக்கம்; அறநிலையத்துறை மீது பக்தர்கள் அதிருப்தி ஆனுார் கோவில் திருப்பணிகள் முடக்கம்; அறநிலையத்துறை மீது பக்தர்கள் அதிருப்தி
ஆனுார் கோவில் திருப்பணிகள் முடக்கம்; அறநிலையத்துறை மீது பக்தர்கள் அதிருப்தி
ஆனுார் கோவில் திருப்பணிகள் முடக்கம்; அறநிலையத்துறை மீது பக்தர்கள் அதிருப்தி
ஆனுார் கோவில் திருப்பணிகள் முடக்கம்; அறநிலையத்துறை மீது பக்தர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 04, 2024 05:27 AM

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அருகில், பாலாற்று படுகையாக உள்ள ஆனுார் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், வேதநாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
வேதநாராயண பெருமாள், தம் தேவியருடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமி திருமேனி சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
முன்மண்டப இடதுபுறம், சீதாதேவியுடன் கோதண்டராமர், வலதுபுறம் லஷ்மி நாராயண பெருமாள், விஷ்வக்சேனர், திருமங்கையாழ்வார். பிற ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் உள்ளிட்டோர் வீற்றுள்ளனர்.
பெரிய திருவடி கருடரும், தனி சன்னிதியில் வீற்றுள்ளார். கோவிலின் முன் உயரமான கல்லாலான விளக்குத்துாண் உண்டு.
பிரம்மாவிடம் இருந்து வேதங்களை பறித்த அசுரர்களை, மகாவிஷ்ணு அழித்து, வேதங்களை மீட்டு, இங்கு பிரம்மாவிடம் அளித்து, வேதநாராயண பெருமாளாக தோன்றியதாக தல வரலாறு.
சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கோவிலுக்கு, பல்லவ, சோழ மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.
ஆனியூர், ஆதியூர், சித்திரமேழி, விண்ணகரம் உள்ளிட்ட பெயர்களிலும் விளங்கியுள்ளது.
இப்பகுதியில், பாலாறு, வடக்கு தெற்காக பாய்ந்து, கரையோரம் இவ்வூர் அமைந்து, 'தட்சிண பிரயாகைக்கு' இணையாக, பக்தர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய ஆன்மிக சிறப்பு வாய்ந்த கோவிலை, நீண்டகாலம் பராமரிக்கவில்லை.
சுவாமி சன்னிதி, முன்மண்டபம், சுற்றுச்சுவர் பெயர்ந்து, புதர் சூழ்ந்து சீரழிந்தது.
தினசரி வழிபாடு மட்டுமே தொடர்ந்தது. கோவிலை புனரமைத்து மேம்படுத்துமாறு, பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, திருப்பணிகள் மேற்கொள்வதாக, 2022 சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அறநிலையத்துறையே கடந்த ஆண்டு பணிகளை துவக்கியது. சுவாமி சன்னிதி மண்டப கற்கள், பிரித்து வெளியே வைக்கப்பட்டன.
பின், தன்னார்வலர்கள் வாயிலாக திருப்பணிகள் செய்ய முடிவெடுத்ததால், சர்ச்சை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால், ஓராண்டிற்கும் மேலாக பணிகள் முடங்கியுள்ளன. அறநிலையத்துறை நிர்வாகம், விரைந்து பணிகளை துவக்கி, கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு, சக்திவிநாயகர் கோவில் மற்றும் இக்கோவில் செயல் அலுவலர் சரஸ்வதியிடம், மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு, இதுபற்றி கேட்டபோது, மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறி, அழைப்பை துண்டித்து விட்டார்.