Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கந்தசுவாமி கோவில் குளக்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

கந்தசுவாமி கோவில் குளக்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

கந்தசுவாமி கோவில் குளக்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

கந்தசுவாமி கோவில் குளக்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

ADDED : ஜூலை 11, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான, மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில், விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக, வடக்கு குளக்கரை பகுதி உள்ளது. வாகனத்தில் வருவோர், பேருந்தில் வருவோர் இந்த வழியாகவே வருகின்றனர்.

அதேபோல், கிழக்கு குளக்கரை பகுதியில் மொட்டை அடிக்கும் மண்டபம், நான்கு கால் மண்டபம், கழிப்பறை போன்றவை உள்ளன.

குளத்தை ஒட்டி ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகள், பக்தர்களுக்கு இடையூறாக இருந்தன. 30 அடி அகலத்தில் இருக்கும் வழியானது, 20 அடி அகலத்திற்கு குறைந்தது.

கடந்த ஜூலை 2021ல், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலை ஆய்வு செய்தபோது, குளத்தின் சுற்றுச்சுவரை கலைநயத்துடன் புனரமைக்கவும், கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார்.

அதன்பின், 26 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு பக்க சுற்றுச்சுவர் கலைநயத்துடன் புனரமைக்கப்பட்டது. இந்த சுற்றுச்சுவரை மறைக்கும் வகையில், சுற்றிலும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டன. இந்த கடைகள் பக்தர்களுக்கு இடையூறாகஇருந்தன.

எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில் நிர்வாகத்திற்கு, தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் சார்பில் செயல் அலுவலர் குமர வேல் தலைமையில், போலீசார் உதவியுடன் 80க்கும் மேற்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

அதேபோல், திருப்போரூர் நான்கு மாடவீதி களில் சாலை மற்றும் கால்வாய் பகுதிகளில் கட்டடம், சிமென்ட் ஓடு, இரும்பு தகடு மேற்கூரை அமைத்து பலர் ஆக்கிரமித்திருந்தனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மூன்று மாதத்திற்கு முன் வருவாய்த் துறை, பேரூராட்சி நிர்வாகம் மாடவீதிகளில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது.

இந்நிலையில், பலர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்தனர். நேற்று வருவாய்த் துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர், போலீசார் உதவியுடன் மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us