ADDED : ஜூலை 11, 2024 10:49 PM

புதுடில்லி: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இத்தாலியின் பாவ்லினி முன்னேறினார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-7' வீராங்கனை, இத்தாலியின் பாவ்லினி, 'நம்பர்-37' ஆக உள்ள குரோஷியாவின் டோன்னா வெகிச் மோதினர்.
முதல் செட்டை வெகிச் 6-2 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட் ஒரு கட்டத்தில் 4-4 என சம நிலையில் இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து இரு கேம்களை கைப்பற்றிய பாவ்லினி, 6-4 என இரண்டாவது செட்டை வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்ய மூன்றாவது செட் நடந்தது.
இதன் ஒரு கட்டத்தில் 5-4 என முன்னிலை வகித்தார் பாவ்லினி. பின் 6-6 என சமன் ஆக, 'டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் 7-6 என வென்றார். 2 மணி நேரம், 51 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாவ்லினி, 2-6, 6-4, 7-6 என வெற்றி பெற்று, முதன் முறையாக விம்பிள்டன் பைனலுக்குள் நுழைந்தார்.
சமீபத்திய பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கும் பாவ்லினி முன்னேறி இருந்தார். இதையடுத்து அமெரிக்காவின் செரினா வில்லியம்சிற்கு (2015, 2016ல்) அடுத்து, ஒரே சீசனில் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என இரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை ஆனார்.
ஜோகோவிச் மோதல்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. உலகின் 'நம்பர்-2' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், 25வது இடத்திலுள்ள, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன் முறையாக அரையிறுதியில் களமிறங்கும் இத்தாலியின் மசெட்டியை சந்திக்கிறார். விம்பிள்டன் 7 கோப்பை வென்ற ஜோகோவிச், பைனலுக்கு முன்னேற முயற்சிக்கலாம்.
மற்றொரு அரையிறுதியில் 'நம்பர்-3' வீரர் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 'நம்பர்-5' ஆக உள்ள ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.