ADDED : ஜூலை 06, 2024 11:05 PM

மாட்ரிட்: ஸ்பெயின் கிராண்ட்பிரிக்ஸ் மல்யுத்தத்தில் பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் கிராண்ட்பிரிக்ஸ் மல்யுத்த தொடர் நேற்று துவங்கியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க காத்திருக்கும் உலக நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நேற்று பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. விசா தாமதத்தால் கடைசி சில மணி நேரத்துக்கு முன் ஸ்பெயின் சென்ற இந்தியாவின் வினேஷ் போகத், 50 கிலோ பிரிவில் களமிறங்கினார்.
முதல் போட்டியில் பான் அமெரிக்க போட்டியில் தங்கம் வென்ற கியூபாவின் யஸ்னெலிசை 12-4 என வென்றார். அடுத்து நடந்த காலிறுதியில், 2022 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி கைப்பற்றிய கனடாவின் மேடிசன் பார்க்கை 'நாக் அவுட்' முறையில் வென்றார்.
அரையிறுதியில் வினேஷ் போகத், கனடாவின் கேட் டட்சாக் மோதினர். இதில் வினேஷ் போகத் 9-4 என வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் மரியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.