/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்... * பிரதமர் மோடி நம்பிக்கை ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்... * பிரதமர் மோடி நம்பிக்கை
ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்... * பிரதமர் மோடி நம்பிக்கை
ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்... * பிரதமர் மோடி நம்பிக்கை
ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்... * பிரதமர் மோடி நம்பிக்கை
ADDED : ஜூலை 05, 2024 11:01 PM

புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்ப்பர்,'' என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26-ஆக.11) நடக்க உள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் 21, தடகளத்தில் 28 பேர் உட்பட சுமார் 120 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) இந்தியா 7 பதக்கம் வென்றது.
இம்முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் பெறும் இலக்கில் உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்களிடம் நேரடியாகவும் 'வீடியோ கான்பரசிங்' மூலமாகவும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி கூறுகையில்,''ஒலிம்பிக் என்பது கற்றுக் கொள்வதற்கான சிறந்த களம். உலகின் பெரும் விளையாட்டு திருவிழா என்பதால் கவனச் சிதறல் ஏற்படலாம். திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். உங்கள் இலக்கில் கவனமாக இருந்தால், பலன் நிச்சயமாக கிடைக்கும். பதக்கம் வெல்கிறீர்களோ இல்லையோ, நுாறு சதவீத திறமை வெளிப்படுத்துவது அவசியம். இந்த முறை நீங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களது வாழ்க்கையின் வெற்றிப் பயணம் 140 கோடி மக்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க எனது வாழ்த்துகள். தாயகம் திரும்பிய பின், டில்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின நிகிழ்ச்சிக்கு உங்களை அழைக்க ஆர்வமாக உள்ளேன்,''என்றார்.
'சுர்மா' எங்கே
பிரதமர் மோடியிடம் நீரஜ் சோப்ரா பேசுகையில்,''ஜெர்மனியில் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் நுாறு சதவீத உடற்தகுதியுடன் பங்கேற்பேன்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக களமிறங்கிய போது, மனதில் எவ்வித அச்சமும் இல்லை. ஈட்டி எறிதலில் அசத்தி, நாட்டுக்காக தங்கம் வென்றேன். ஐரோப்பிய, அமெரிக்க நட்சத்திரங்களை பார்த்து நாம் அச்சப்பட தேவையில்லை. அவர்களும் நம்மை போல மனிதர்கள் தான். எதற்கும் அச்சப்படாமல் துணிச்சலாக விளையாடுங்கள். நம்மால் முடியாதது எதுவுமில்லை,''என்றார்.
அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி,''கடந்த முறை தங்கம் வென்ற போது சுர்மா (ஹரியானாவின் பிரபலமான இனிப்பு) தருவதாக சொன்னீர்கள்... என்ன ஆச்சு'' என்றார். இம்முறை கண்டிப்பாக தருவதாக உறுதி அளித்தார் நீரஜ். அதற்கு மோடி,'' உங்கள் வீட்டில் இருந்து, அம்மா கையால் செய்த சுர்மாவை சாப்பிட விரும்புகிறேன்,'' என்றார்.
நல்லா துாங்குங்க
பிரதமர் மோடி கூறுகையில்,''விளையாட்டில் பயிற்சி முக்கியம். இதே போல துாக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். துாக்கத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். மனஅழுத்தம் இல்லாமல் துாங்குங்கள். பதட்டப்படாமல் எப்போதும் அமைதியாக இருங்கள்,''என ஆலோசனை கூறினார்.
சிந்து 'நிறம்' மாறுமா
ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்ல காத்திருக்கிறார் பாட்மின்டன் வீராங்கனை சிந்து. இவர், பிரதமர் மோடியிடம் கூறுகையில்,''2016ல் வெள்ளி வென்றேன். 2021ல் டோக்கியோவில் வெண்கலம் பெற்றேன். இம்முறை தங்கத்திற்கு நிறம் மாற விரும்புகிறேன். தேசத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்,''என்றார்.
ஹாக்கியில் பதக்கம்
ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில்,''இந்தியாவின் ஹாக்கி வரலாறு மகத்தானது.டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது பெருமையான தருணம். களத்தில் பம்பரமாக சுழன்று விளையாடி, மீண்டும் பதக்கம் வெல்வோம்,''என்றார்.
2036ல் வாய்ப்பு
பிரதமர் மோடி கூறுகையில்,''இந்தியாவில் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் உறுதியாக உள்ளோம். இதற்கான பணிகள் நடக்கின்றன. போட்டிகள் இல்லாத சமயத்தில் பாரிசில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி நமது நட்சத்திரங்கள் கவனிக்க வேண்டும். இவர்கள் அளிக்கும் தகவல், நமது ஒலிம்பிக் பயணத்திற்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.