/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் கிரண் * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்... தங்கம் வென்றார் கிரண் * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
தங்கம் வென்றார் கிரண் * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
தங்கம் வென்றார் கிரண் * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
தங்கம் வென்றார் கிரண் * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
ADDED : ஜூன் 28, 2024 10:35 PM

பஞ்ச்குலா: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற கிரண், நேற்று நடந்த 400 மீ., பைனலில் தங்கம் வென்றார்.
ஹரியானாவில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் அசத்திய ஹரியானாவின் கிரண் பஹல், 50.92 வினாடி நேரத்தில் வந்தார். இதையடுத்து 23 வயதான கிரண், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
நேற்று 400 மீ., ஓட்ட பைனல் நடந்தது. இதில் மீண்டும் 50.92 வினாடியில் வந்த கிரண், தங்கம் கைப்பற்றினார். தவிர, ஹிமா தாசிற்கு (50.79 வினாடி, 2018) அடுத்து சிறப்பாக செயல்பட்ட வீராங்கனை ஆனார்.
சோதனை கடந்து சாதனை
கிரண் கூறுகையில்,'' எனது தடகள கனவு நிறைவேற உதவினார் தந்தை ஓம் பிரகாஷ். நுரையீரல் பிரச்னையால் 2022ல் மரணம் அடைந்தார். இதன் பின் எனது குடும்பத்தினர் என்னை கண்டு கொள்ளவில்லை. கடந்த 18 மாதங்களாக என்னிடம் அலைபேசி கிடையாது. உணவுக்கு கூட போதிய பண வசதி இல்லை. சக வீராங்கனை ஹிமா தாஸ், சகோதரி போல உதவினார். நரகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.
இளம் வீராங்கனையான கிரணுக்கு தேவையான உதவிகளை இந்திய தடகள கூட்டமைப்பு செய்ய வேண்டும். இவருக்கு சிறந்த பயிற்சியாளர், சத்தான உணவு கிடைக்க ஏற்பாடு செய்வது அவசியம்.
கிரிதராணி 'வெள்ளி'
நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் கிரிதராணி (11.77 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார். கர்நாடகாவின் ஸ்நேகா (11.62) தங்கம் வென்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் கேரளாவின் முகமது அனாஸ் தாஹியா (45.93 வினாடி), முகமது அஜ்மல் (45.93) தங்கம், வெள்ளி வென்றனர்.
ஈட்டி எறிதல் வீரருக்கு தடை
இந்திய ஈட்டி எறிதல் வீரர் டி.பி.மானு 24. கடந்த 2023 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். உலக தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் தகுதி பெற இருந்தார். இவரிடம் நடந்த ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஸ்டெராய்டு என்ற மருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதனால் மானு, போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.