/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாரிஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய படைபாரிஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய படை
பாரிஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய படை
பாரிஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய படை
பாரிஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய படை
ADDED : ஜூலை 25, 2024 11:25 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் இலக்குடன் இந்திய படை களமிறங்குகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26-ஆக.11) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் தடகளம் (29), துப்பாக்கி சுடுதில் (21), ஹாக்கி (19) என மூன்று போட்டியில் மட்டும் 69 பேர் கலந்து கொள்கின்றனர்.
சாதிப்பாரா நீரஜ்:கடந்த முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீண்டும் சாதிக்கலாம். தொடை பகுதி காயத்தில் இருந்து மீண்ட இவர் அசத்தும் பட்சத்தில், அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெறலாம். இதற்கு முன் பாட்மின்டனில் சிந்து (2016, ரியோ, 2012, டோக்கியோ), மல்யுத்தத்தில் சுஷில் குமார் (2008, பீஜிங், 2012 லண்டன்) தொடர்ந்து இரு பதக்கம் வென்றிருந்தனர்.
சிந்து 'ஹாட்ரிக்': தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் இந்தியர்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை. இந்த சாதனையை படைக்க பாட்மின்டன் வீராங்கனை சிந்து காத்திருக்கிறார். இவர் கூறுகையில்,''ஒவ்வொரு முறையும் புதிய ஒலிம்பிக் போட்டி என நினைத்து களமிறங்குவேன். ஏற்கனவே இரு பதக்கம் வென்றுள்ளேன். இம்முறை 'ஹாட்ரிக்' சாதனை படைப்பேன்,'' என்றார். பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி நல்ல 'பார்மில்' இருப்பது பலம். இவர்கள் பதக்கம் வெல்லலாம்.
'சீனியர்' போபண்ணா:டென்னிசில் சீனியர் ரோகன் போபண்ணா, தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, டேபிள் டென்னிசில் சரத் கமல், தடகளத்தின் 'ஸ்டீபிள்சேசில்' அவினாஷ் சேபிள், பாருல் சவுத்ரி, பிரவீன் சித்ரவேல் (டிரிப்பிள் ஜம்ப்), வில்வித்தையில் தீபிகா குமாரி, துப்பாக்கி சுடுதலில் மனுபாகர் நம்பிக்கை தருகின்றனர்.
வினேஷ் சவால்:இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்திய வினேஷ் போகத், சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பளுதுாக்குதலில் மீராபாய் சானு, குத்துச்சண்டையில் அனுபவ லவ்லினா, நிகாத் ஜரீன் முத்திரை பதிக்கலாம்.
ஹாக்கி ஏக்கம் தீருமா: ஒலிம்பிக் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 8 தங்கம் வென்ற பெருமைமிக்கது. கடைசியாக மாஸ்கோ ஒலிம்பிக்கில் (1980) தங்கம் கைப்பற்றியது. கடந்த முறை வெண்கலம் கிடைத்தது. 44 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வெல்லும் உறுதியுடன் பாரிஸ் சென்றுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான நமது அணியினர் 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோல் ஆக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜென்டினா போன்ற பலம் வாய்ந்த அணிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், பதக்கம் வென்று விடைபெறலாம்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா 35 பதக்கம் வென்றுள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டின் சார்பில் அபினவ் பிந்த்ரா (2008, துப்பாக்கி சுடுதல்), நீரஜ் சோப்ரா (2021) என இருவர் மட்டுமே தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் கிடைத்தது. பாரிசில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்ல வேண்டும். தனிநபர் பிரிவிலும் நம்மவர்கள் தங்கம் வென்று சாதிக்க வேண்டும்.
நதியில் விளையாடி
ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதன் துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம். இம்முறை சற்று வித்தியாசமாக பாரிசின் சென் நதியில் துவக்க விழா நடக்க உள்ளது. ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கும். 100 படகுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10, 500 வீரர், வீராங்கனைகள் செல்ல உள்ளனர். பாரிசின் அழகை ரசித்தவாறு 6 கி.மீ., துாரத்திற்கு படகில் பயணிக்கலாம். நதியின் இரு புறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண உள்ளனர். பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா அசத்த உள்ளனர். பின் நடக்கும் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சிந்து, சரத் கமல் ஏந்தி வர உள்ளனர்.
ஐந்து வளையம்
ஐந்து நிறத்தினால் ஆன ஒலிம்பிக் வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு இருக்கும். இது, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என, உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கும்.
கொடி
வெள்ளை நிறத்தில் எவ்வித 'பார்டரும்' இல்லாதது தான் ஒலிம்பிக் கொடி. இதன் மத்தியில் ஐந்து வளையங்கள் இருக்கும். இதில் உள்ள நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒன்று அனைத்து நாட்டு தேசிய கொடியிலும் இடம் பெற்றிருக்கும். இதனை, நவீன ஒலிம்பிக்கின் தந்தை டி கோபர்டின் வடிவமைத்தார்.
லட்சியம்
ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம் என்பது, 'போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும்,' என்கிறார் நிறுவனர் டி கோபர்டின்.
அமெரிக்கா ஆதிக்கம்
ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை பங்கேற்ற 28 ஒலிம்பிக்கில், 1061 தங்கம், 830 வெள்ளி, 738 வெண்கலம் என, 2629 பதக்கங்களை அள்ளியது.
மூன்று முறை
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 3வது முறையாக (1900, 1924, 2024) ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதன்மூலம் அதிக முறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை இங்கிலாந்தின் லண்டனுடன் (1908, 1948, 2012) பகிர்ந்து கொண்டது.
நான்கு முறை
அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதுவரை அமெரிக்காவில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்தப்பட்டது.
* இங்கிலாந்து (1908, 1948, 2012), பிரான்சில் (1900, 1924, 2024) தலா 3, ஆஸ்திரேலியா (1956, 2000), ஜெர்மனி (1936, 1972), கிரீசில் (1896, 2004) தலா 2 முறை நடந்தன.
* சுவீடன் (1912), பெல்ஜியம் (1920), நெதர்லாந்து (1928), பின்லாந்து (1952), இத்தாலி (1960), ஜப்பான் (1964), மெக்சிகோ (1968), கனடா (1976), சோவியத் யூனியன் ரஷ்யா (1980), தென் கொரியா (1988), ஸ்பெயின் (1992), சீனா (2008), பிரேசில் (2016) நாடுகள் தலா ஒரு முறை நடத்தின.
ஐந்து நாடுகள்
இங்கிலாந்து, கிரீஸ், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து என, ஐந்து நாடுகள் மட்டும் இதுவரை நடந்த அனைத்து ஒலிம்பிக் போட்டியிலும் (29) பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் குறைந்தபட்சம் ஒரு தங்கம் வென்ற நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
பெல்ப்ஸ் '28'
ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர் (2004-2016), 28 பதக்கம் (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) வென்றுள்ளார். அடுத்த இடத்தில் சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிசா லத்தினினா (9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம், 18 பதக்கம்) உள்ளார்.
சின்னம் என்ன
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னத்திற்கு 'ஒலிம்பிக் பிரைஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. இது, சுதந்திர போராட்டம், பிரெஞ்ச் குடியரசை பிரதிபலிக்கும் பாரம்பரிய 'பிரிஜியன்' தொப்பிகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது, பிரான்ஸ் தேசிய கொடியின் நிறத்தில் (வெள்ளை, நீலம், சிவப்பு) அமைக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனையில் சாதனை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண மொத்தம் ஒரு கோடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியை (1996) காண 83 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது.