Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கிளம்பியது இந்திய ஹாக்கி படை * பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க

கிளம்பியது இந்திய ஹாக்கி படை * பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க

கிளம்பியது இந்திய ஹாக்கி படை * பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க

கிளம்பியது இந்திய ஹாக்கி படை * பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க

ADDED : ஜூலை 08, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய ஹாக்கி அணியில் பாரிஸ் கிளம்பிச் சென்றனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி (ஆண்கள்), 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 41 ஆண்டுக்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) வெண்கலம் கைப்பற்றியது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியா, பாரிஸ் ஒலிம்பிக்கில் (ஜூலை 26-ஆக. 11) பங்கேற்க தகுதி பெற்றது. இம்முறை இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து (ஜூலை 27), அர்ஜென்டினா (ஜூலை 29), அயர்லாந்து (ஜூலை 30), பெல்ஜியம் (ஆக. 1), ஆஸ்திரேலியா (ஆக. 2) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில் பெங்களூரு விளையாட்டு ஆணையத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். நேற்று பயிற்சியாளர் கிரெக் புல்டன், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியினர், ஒலிம்பிக் போட்டிக்காக பாரிஸ் கிளம்பிச் சென்றனர்.

வழியில் சுவிட்சர்லாந்து சென்று 3 நாள் முகாமில் பங்கேற்கின்றனர். அங்கிருந்து நெதர்லாந்து செல்லும் இந்திய அணியினர், பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளனர். பின் ஜூலை 20ல் பாரிஸ் சென்றடைவர்.

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' பெங்களூரு விளையாட்டு ஆணையத்தில் இருவார பயிற்சி முடித்து, சுவிட்சர்லாந்து செல்கிறோம். அங்கிலாந்து நெதர்லாந்து மண்ணில் மலேசியா, நெதர்லாந்துடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளோம்,'' என்றார்.

கிரிக்கெட் அணி போல...

இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறியது:

'டி-20' உலக கோப்பை பைனலில், 15வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணி கிட்டத்தட்ட வெற்றி பெறப் போகும் நிலை. ஆனால் இந்திய அணியினர் நம்பிக்கை இழக்கவில்லை. மனம் தளராமல் போராடி கோப்பை வென்றனர். கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றியை கொண்டாடக் கூடாது என இந்த உலக கோப்பை கற்றுக் கொடுத்தது.

இது எங்களுக்கு மட்டுமல்ல, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு இந்தியர் நட்சத்திரங்களுக்கு சிறந்த பாடம். நமது கிரிக்கெட் அணியை பார்த்து கடைசி வரை போராடும் குணத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us