ADDED : ஜூன் 11, 2024 10:21 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலுக்கான இந்திய அணியில் மனு பாகர் இரு பிரிவில் இடம் பெற்றார்.
பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதற்கான துப்பாக்கிசுடுதல் போட்டியை பொறுத்தவரையில், ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் வழங்கப்படும். மற்றபடி மல்யுத்தம், டென்னிஸ் போல, தனித் தனியாக தகுதி பெற முடியது.
இதன் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 24 பேர் பங்கேற்கலாம். இதுவரை 21 இடங்களை இந்திய நட்சத்திரங்கள் உறுதி செய்தனர். இவ்வளவு பேர் ஒலிம்பிக் செல்வது இதுதான் முதன் முறை. முன்னதாக ரியோவில் (2016) 12, டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) 15 பேர் பங்கேற்றனர்.
தற்போது முதற்கட்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பல்வேறு தகுதி போட்டியில் வீரர், வீராங்கனைகள் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் படி 8 'ரைபிள்', 7 'பிஸ்டல்' என மொத்தம் 15 பேர் இடம் பெற்றனர்.
இளம் வீராங்கனை மனுபாகர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்', 25 மீ., 'பிஸ்டல்' என இரு பிரிவில் பங்கேற்கும் ஒரே வீராங்கனை ஆனார். தவிர இளவேனில், சிப்ட் கவுர், அஞ்சும் மவுத்கில், ஈஷா சிங் உள்ளிட்டோர் இதில் உள்ளனர். 10மீ., ரைபிள் பிரிவில் உலக சாம்பியன் ஆன ருத்ரான்க்ஸ், தகுதிச்சுற்றில் சொதப்பியதால் அணியில் சேர்க்கப்படவில்லை. 'ஷாட் கன்' பிரிவு நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.