ADDED : ஜன 31, 2024 09:54 PM

அடிலெய்டு: பாரிஸ் ஒலிம்பிக், படகு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார் விஷ்ணு சரவணன்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உலக படகு வலித்தல் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் சிறப்பாக செயல்படும் 'டாப்-7' வீரர்கள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (வரும் ஜூலை 26-ஆக. 11) பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் தமிழகத்தின் விஷ்ணு சரவணன் பங்கேற்றார்.
கடந்த 2019, 21 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டிலும் வெண்கல பதக்கம் பெற்றிருந்தார். இம்முறை முதல் ஐந்து சுற்றில் தொடர்ந்து 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்றார். இருப்பினும் கடைசி 3 பந்தயத்தில், ஏமாற்றிய இவர் 174 புள்ளி பெற்று பதக்க வாய்ப்பை இழந்தார். எனினும் மொத்தம் பங்கேற்ற 152 பேரில் சரவணன், 26 வது இடம் பிடித்தார்.
தவிர ஆசிய நாடுகளில் இருந்து பங்கேற்ற வீரர்களில், முதலிடம் பிடித்தார். ஆசிய விளையாட்டில் தங்கம், கான்டினென்டல் தொடரில் சாதித்த ஹாங்காங், தாய்லாந்து வீரர்களை பின்தள்ளினார். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆனார்.