/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவின் ஒலிம்பிக் சோக நினைவுகள்இந்தியாவின் ஒலிம்பிக் சோக நினைவுகள்
இந்தியாவின் ஒலிம்பிக் சோக நினைவுகள்
இந்தியாவின் ஒலிம்பிக் சோக நினைவுகள்
இந்தியாவின் ஒலிம்பிக் சோக நினைவுகள்

கால்பந்து
மெல்போர்ன் (1956) ஒலிம்பிக் கால்பந்தில் சமர் பானர்ஜி தலைமையிலான இந்திய அணி அசத்தியது. காலிறுதியில் நெவில்லே டிசோசா 'ஹாட்ரிக்' கோல் அடிக்க, வலிமையான ஆஸ்திரேலியாவை 4-2 என வீழ்த்தியது. ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்றது. அரையிறுதியில் இந்திய அணி, யுகோஸ்லாவியாவிடம் 4-1 என தோல்வி அடைந்தது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பல்கேரியாவிடம் 0-3 என தோற்று, நான்காவது இடம் பிடித்தது.
மில்கா சிங்
ரோம் (1960) ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங், காற்றை கிழித்துக் கொண்டு ஓடினார். 250 மீ., வரை முன்னிலையில் இருந்தார். இதே வேகத்தில் இலக்கை எட்ட முடியுமா என்ற சந்தேகத்துடன் பின்னால் வந்தவர்களை திரும்பி பார்த்தார். வேகத்தை குறைத்த இவரால் மீள முடியவில்லை. அனைத்து வீரர்களும் 'போட்டோ பினிஷ்' பாணியில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் எல்லைக் கோட்டை எட்டினர். மில்கா சிங் (45.600 வினாடி), 0.1 வினாடி வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்து, நான்காவது இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் மால்கம் கிளைவ் ஸ்பென்ஸ் (45.500) வெண்கலம் பெற்றார். முதல் இரு இடங்களை பெற்ற அமெரிக்காவின் ஓடிஸ் கிராண்டல் டேவிஸ் (44.900), ஜெர்மனியின் கார்ல் காப்மேன் (44.900) இடையிலான வித்தியாசம் ஒரு வினாடியில் நுாறில் ஒரு பங்கு.
ஹாக்கி
ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன், போர் தொடுத்ததால், மாஸ்கோ (1980) ஒலிம்பிக்கை நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட 'டாப்' ஹாக்கி அணிகள் புறக்கணித்தன. இதனால் இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலம் வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அப்போதைய சோவியத் யூனியன் அணியிடம் 3-1 என தோல்வி அடைந்து நான்காவது இடம் பிடித்தது.
பி.டி.உஷா
லாஸ் ஏஞ்சலஸ் (1984) ஒலிம்பிக்கில் மில்கா சிங்கை நினைவுபடுத்தினார் பி.டி.உஷா. 400 மீ., தடை ஓட்டத்தில் 1/100 வினாடி வித்தியாசத்தில் வெண்கலத்தை (55.42 வினாடி) தவறவிட்டார். ருமேனியாவின் கிறிஸ்டினா கொஜோகோருவுக்கு (55.41 வினாடி) அடுத்து நான்காவது இடம் பெற்றார். 'பயோலி எக்ஸ்பிரஸ்' என போற்றப்பட்ட உஷா, இந்தியாவில் தடகள எழுச்சிக்கு வித்திட்டார்.
பயஸ்-பூபதி
ஏதென்ஸ் ஒலிம்பிக் (2004) டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பயஸ்-மகேஷ் பூபதி, குரோஷியாவின் மரியோ அன்சிச், இவான் லுஜுபிசிச் ஜோடியிடம் 6-7, 6-4, 14-16 என ஒரு மாரத்தான் போராட்டத்திற்கு பின் தோல்வி அடைந்து நான்காவது இடம் பெற்றனர்.
ஜாய்தீப் கர்மாக்கர்
லண்டன் ஒலிம்பிக்கில் (2012) ஜாய்தீப் கர்மாகர், 50 மீ.. ரைபிள் பிரிவில் 1.9 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார்.
தீபா கர்மாகர்
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன் ரியோ டி ஜெனிரோவில் (2016) தீபா கர்மாகர் களமிறங்கினார். 'வால்ட்' பைனலில் ஒட்டுமொத்தமாக 15.066 புள்ளி பெற்றார். 0.150 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை நழுவவிட்டார்.
ஹாக்கி
டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) இந்திய ஹாக்கி அணி, வெண்கலத்துக்கான பேட்டியில் பிரிட்டனை சந்தித்தது. ராணி ராம்பால் தலைமையிலான நமது அணியினர் 3-2 என முன்னிலையில் இருந்தனர். ஆனால், பிரிட்டன் அடுத்தடுத்து 2 கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. இறுதியில் இந்திய பெண்கள் அணி 3-4 என தோல்வி அடைந்து வெண்கலம் பெறும் வாய்ப்பை இன்னொரு முறை இழந்தது.