ADDED : செப் 24, 2025 11:57 PM

சியோல்: தென் கொரியாவில் பாரா 'கிளிம்பிங்' உலக சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் மணிகண்டன் குமார் பங்கேற்றார். கடந்த 2012ல் உலக சாம்பியன் ஆன இவர், 36+ புள்ளி எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2014க்குப் பின் உலக அளவில் இவர் வென்ற முதல் வெள்ளிப்பதக்கம் இது. அமெரிக்காவின் பிரைடன் பட்லர் (44+) தங்கம், ஜெர்மனியின் பிலிப் (36) வெண்கலம் கைப்பற்றினர்.
போலியோ பாதிப்பு
பெங்களூருவை சேர்ந்த மணிகண்டன், வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். 5 வயதில், வலது காலில் ஏற்பட்ட 'போலியோ' பாதிப்பில் இருந்து மீண்டார். 16 வயதில் பள்ளியில் நடந்த சாகச முகாமில் பங்கேற்றார். பின் வேகமாக சுவற்றில் ஏறும், சாகச போட்டிகளில் ('கிளிம்பிங்') பங்கேற்றார். தற்போது, உலக சாம்பியன்ஷிப்பில் இதுவரை ஆறு பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
ஜோகா சாதனை
பெண்களுக்கான 'ஸ்பீடு கிளிம்பிங்' போட்டியில் இந்தியாவின் ஜோகா பர்டி, 7.883 வினாடியில் இலக்கை அடைந்து, புதிய தேசிய சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக இவர் 31வது இடம் (மொத்தம் 42) பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார்.